

கோவையில் பழத்தோட்டம் வைத்திருக்கும் பேராசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகத் தோட்ட சுற்றுலா ஏற்பாடு செய்து வருகிறார்.
நகரப்புறத்தில் வசித்து வரும் பள்ளி மாணவர்களில் பலர் ஆடு, மாடு பார்த்திடாதவர்களே. கால்நடைகள் மட்டுமல்ல எந்த மரத்தில் எந்த பழம் காய்க்கும் என்றுகூட மரத்தைப் பார்த்துக் கண்டுபிடிக்க முடியாத நிலையில்தான் வளர்க்கப்படுகின்றனர். தவறு அவர்களுடையது அல்ல.
சூப்பர் மார்கெட்டுகளில் மட்டுமே காய்கறிகளையும் கனிகளையும் பார்த்துப் பழகிய அவர்களுக்கு விவசாயம் குறித்தும், இயற்கை குறித்தும் எப்படித் தெரிந்திருக்க முடியும்? பசுமையான சூழலைவிட்டு வெகு தொலைவில் வாழும் சுற்றுச்சூழலைத்தான் நகரமயமாதல் உருவாக்கியுள்ளது. அப்படியே நகரத்தில் மரங்கள் தென்பட்டாலும் அவை குரோட்டன்ஸாகவும், போன்சாய் மரங்களாகவும் செயற்கைத் தன்மையோடு வளர்ந்து நிற்கின்றன.
இந்நிலையை தன்னாலான செயல்பாடுகள் வழியாக மாற்ற முனைந்திருக்கிறார் பேராசிரியர் ஜெயகுமார். கோவை மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில் மூன்று ஏக்கர் பரப்பளவில் பழத்தோட்டம் பராமரித்து வருகிறார் இவர். இதழியல் துறை பேராசிரியரான இவர் தனது தோட்டத்தில் உள்ள பழ மரங்களை பள்ளி மாணவர்கள் கண்டு, தொட்டு, ஏறி, அவற்றில் காய்த்து தொங்கும் பழங்களைப் பறித்துச் சுவைக்க ஏற்பாடு செய்து வருகிறார்.
இதுவரை 2000-க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் இவரது தோட்டத்துக்கு வருகை தந்துள்ளனர். அத்தனை மாணவர்களுடனும் பழ வகைகள், செடி கொடிகள், கால்நடைகள் குறித்து உரையாடுவது ஜெயகுமாருக்கும் அவரது மனைவி கீதாவுக்கும் வழக்கம். இயற்கையோடு ஒன்றும் பேரார்வத்தைக் குழந்தைகளிடம் விதைக்கும் பேராசிரியருக்கு வாழ்த்துகள்.