

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் மன நலம் தொடர்பான தகவல்களை ஆசிரியர்கள் சேகரித்து எமிஸ் செயலியில் பதிவேற்றும்படி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த கல்வியாண்டில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது பரவலான வரவேற்பு கிடைத்தது. பெற்றோர் குழந்தைகளை அக்கறையோடு வளர்த்தாலும் வயதுக்கு ஏற்ற உயரம், உயரத்துக்கு உரிய எடை, மன நலம் உள்ளிட்டவற்றைக் கண்டறியும் விழிப்புணர்வு பலருக்கு இருப்பதில்லை.
இன்றைய தேதியில் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட 57% இந்தியப் பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர 2-17 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளில் பலருக்குப் பார்வைக் கோளாறு, பற்களில் பிரச்சினை, உடல் பருமன் உள்ளிட்டவை அதிகமாகி வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பள்ளியிலேயே சோதிப்பதன் மூலம் நிச்சயம் இன்றைய மாணவர்களை நாளைய ஆரோக்கியமான குடிமக்களாக உயர்ந்திட முடியும்.
ஆனால், இதுநாள்வரை இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சோதனையை மாணவர்களிடம் மேற்கொள்வதற்கு உரிய பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படவில்லை. தோராயமாக ஆம்/இல்லை என பதிவு செய்து வருகின்றனர். இதுபோக மாணவர்கள் பஸ் பாஸ் பெறத் தேவையான தகவல்களை சேகரித்தல், தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு தொடங்க உதவுதல் உள்ளிட்ட வேறு பல பணிகளும் ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனால் பாடம் கற்பிப்பதற்கான நேரம் பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் வருந்துகின்றனர். ஆகையால், அரசு பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த அது குறித்த பயிற்சி அளிக்கப்பட்ட அலுவலக உதவியாளர் பள்ளி தோறும் நியமிக்கப்பட வேண்டும்.