

படிப்பை மாணவர்களுக்குக் கொண்டாட்டமாக்க விளையாட்டுகளுடன் உரையாடல் பாணியில் வடிவமைக்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை என்சிஇஆர்டி வெளியிட்டுள்ளது. 1-ம், 2-ம் வகுப்பு குழந்தைகளுக்கான ஆங்கிலம், இந்தி மற்றும் கணிதப் பாடத்துக்கான புத்தகங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இவை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழைப்பை ஈடு செய்ய வழக்கமான பள்ளிக் கல்வியுடன் ’எண்ணும் எழுத்தும்’, ’இல்லம் தேடி கல்வி’, ‘ரீடிங் மாரத்தான்’ போன்ற புதிய உத்திகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அவை மேற்கொண்டு விரிவுபடுத்தவும் செய்யப்பட்டிருக்கிறது.இத்தகைய முன்னெடுப்புகள் இடைக்கால நிவாரணியாகக் கைகொடுத்துள்ளன.
இதுதவிர உலக சினிமா திரையிடல், இலக்கிய திருவிழா போன்ற சிறப்பு ஏற்பாடுகள் மூலம் மாணவர்களின் ஆளுமையும், சிந்தனை திறனும் மெருகேற்றப்படுகிறது.
அதுமட்டுமின்றி பள்ளிப் படிப்பை பரவலாக்கிய இந்திய மாநிலங்களில் தமிழகத்துக்கு நிச்சயம் சிறப்பிடம் உண்டு. ஆனால், அடிப்படை கணிதத் திறன், மொழி அறிவுக்கான சோதனைகளில் தமிழக பள்ளி மாணவர்கள் பின்தங்கி இருப்பது கண்கூடு.
இதற்கு தீர்வு காண கற்பித்தல் முறையில் புதுமை இன்றியமையாதது. குழந்தைகளை மையப்படுத்திய கல்வி திட்டம் அவசியம். அதற்கு விளையாட்டை வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் என்சிஇஆர்டி-யின் பாடப்புத்தகங்களை தமிழக அரசு பரிசீலனை செய்து அடுத்தகட்டத்துக்கு உயர வேண்டும்.
’படிப்பை விளையாட்டா எடுத்துக்காதே’ என்று சிறாரை மிரட்டுவதன் மூலம் கல்வி கசப்பானது என்ற சிந்தனையை தொடர்ந்து விதைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் சொல்ல வேண்டியது: ‘விளையாட்டா படிக்கலாம் வா!’.