

விபத்துக்குள்ளாக இருந்த பள்ளி பேருந்தை தக்க சமயத்தில் நிறுத்தி மாணவர்களின் உயிரை காப்பாற்றியிருக்கிறார் அமெரிக்கச் சிறுவன்.
அமெரிக்கா மிச்சிகன் நகரில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் டில்லியன் ரீவிஸ். தினமும் பள்ளிக்கு பேருந்தில் சென்று வருவது டில்லியனுக்கு வழக்கும். அன்று டில்லியன் உட்பட பள்ளி மாணவர்கள் பலர் பயணம் சென்ற பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட நிலை தடிமாறிப் போனார்.
வேகமாக ஓடிக்கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாடு இழக்கவே விபத்துக்குளாகும் அபாயம் மூண்டது. இதை கண்டு திடுக்கிட்ட டில்லியன் துரிதமாக பேருந்தின் ஸ்டீரிங்கை பிடித்து, பிரேக்கை அழுத்தி பேருந்தை நிறுத்திவிட்டான். இதன் மூலம் ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணம் சென்ற அத்தனை மாணவர்களின் உயிரையும் பத்திரமாகக் காப்பாற்றிவிட்டான் அந்த சிறுவன்.
பேருந்தில் கேமரா பொருத்தப்பட்டிருந்ததால் நடந்த சம்பவம் பதிவாகி அந்த வீடியோவும் தற்போது வைரலாகி உள்ளது. மாணவனின் அசாத்தியமான துணிச்சலுக்கும், அறிவுக்கூர்மைக்கும், நல்லெண்ணத்துக்கும் பாராட்டு குவிகிறது. அதேசமயத்தில் வேறொரு பாடத்தையும் இந்த சம்பவம் கற்பித்துள்ளது.
உடன் பயணம் சென்ற மாணவர்களெல்லாம் தாங்கள் வைத்திருந்த ஸ்மார்ட்போனில் மூழ்கி இருக்க மாணவன் டில்லியன் மட்டும் எந்த தொழில்நுட்ப சாதனமும் இன்றி அந்த பேருந்தில் அமர்ந்திருந்திருக்கிறார். அக்கம் பக்கம் பார்த்துச் சுற்றி உள்ளவற்றை கவனித்தபடி பயணம் செய்யவேதான் நெருங்கி வந்த ஆபத்து டில்லியன் கண்ணில்பட்டது.
இதை வாழ்க்கை பாடமாக எடுத்துக் கொண்டு அலைபேசியில் மூழ்காமல் இளையோரை காக்க வேண்டியது பெரியவர்களின் கடமை.