

சேலம் மாவட்டம் அரசு பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் இருவர் உடன் படிக்கும் மாணவன் குடிநீரில் விஷம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சங்ககிரி அரசு உயர்நிலை பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவ தலைவனுக்கு நேர்ந்த சோகம் இது. தனது வகுப்பில் பயிலும் மாணவர் இருவர் வீட்டுப்பாடத்தை முடிக்காதது குறித்து வகுப்பாசிரியரிடம் புகார் அளித்திருக்கிறான் அந்த மாணவன். உடனே அந்த இருவரும் வீட்டுப்பாடத்தை பலமுறை எழுதும்படி தண்டனை விதித்திருக்கிறார் ஆசிரியர்.
இதனால் ஆவேசம் கொண்டு வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லியை எடுத்துவந்து மாணவ தலைவனின் குடிநீர் பாட்டிலில் இருவரும் கலந்திருக்கிறார்கள். இது தெரியாமல் விஷம் கலந்த நீரைக் குடித்த மாணவன் ஏதோ கசக்கிறதே என்று உடனடியாக துப்பிவிட்டான். வகுப்பாசிரியரிடம் பாதிக்கப்பட்ட மாணவன் புகாரளிக்க பிறகு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் நடந்தவை தெரியவந்துள்ளது.
இது ஏதோ இரண்டு மாணவர்கள் செய்த குற்றம் என்று மட்டும் அணுகிவிடலாகாது. ஈர களிமண் போன்றவர்கள் குழந்தைகள். தாங்கள் எப்படி செதுக்கப்படுகிறார்களோ அதுவாகவே மாறிவிடுவார்கள். இன்றைய சூழலில் காட்சி ஊடகத்தின் அதீத தாக்கத்தால் குழந்தைகளிடமிருந்து குழந்தைமை சிறுவயதிலேயே பறிக்கப்பட்டு விடுகிறது.
இதனால் பொறாமை, வெறுப்பு, பழிவாங்கும் உணர்ச்சி போன்ற தீய எண்ணங்கள் எளிதில் மாணவர்களின் மனதில் குடிகொள்ளத் தொடங்கிவிடுகிறது. இதுபோன்ற சிக்கல்களை களைய தண்டனை மட்டும் தீர்வாகாது.
இதை செய்யாதே என்று சொல்வதை காட்டிலும் எதை செய்ய வேண்டும் என்பதை நேர்மறையாகச் சொல்லி குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு பெற்றோர், ஆசிரியர் இருவருக்குமே உள்ளது.