

சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 5000 மாணவர்களுக்கு பிரத்யேகமாக செயல்படுத்தப்பட்ட ‘சிற்பி’ திட்டத்தின் நிறைவு விழா நடைபெற்றது. மாணவர்களை தரமான மனிதர்களாக உருவாக்குவதே அரசின் கடமை என்று விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் வளரிளம் பருவத்தினரிடையே அதிக அளவிலான நடத்தை சிக்கல் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. மீண்டும் பள்ளிக்கூடம் திறந்த பிறகு ஆசிரியர்-மாணவர்களுக்கு இடையிலான சண்டை சச்சரவு சம்பவங்கள் மூண்டது.
போதைபொருளுக்கு அடிமையாகி பள்ளிக்கு திரும்பாமல் பல மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடுமையான தண்டனை விதிப்பதன் மூலமாக மட்டுமே இந்த போக்கைத் தடுத்து நிறுத்த முடியும் என பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டது. சிறார்களை குற்றவாளிகளை போல நடத்துவது அவர்களை நிரந்தரமாக குற்றவாளியாக மாற்றிவிடும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்தனர்.
இப்பிரச்சினைக்கு நேர்மறையான அணுகுமுறையில் தீர்வு காண முடிவெடுத்த தமிழக அரசு, மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக காவல்துறையுடன் இணைந்து ‘சிற்பி’ திட்டத்தை கொண்டுவந்தது. சென்னை மாநகராட்சியில் 100 பள்ளிகளிலிருந்து 5,000 மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆளுமைத் திறன் மேம்பாடு, பெற்றோர் பேச்சை மதித்து நடத்தல், போக்குவரத்து விதிகளை மதித்தல் உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்பட்டன.
தற்போது திட்ட நிறைவு விழாவில் அரசின் கடமையை மிகச்சரியாக முதல்வர் எடுத்துரைத்திருக்கிறார். குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, ஏழ்மை, ஆதரவின்றி வளர்வது போன்ற வெவ்வேறு காரணங்களால் சிறார் வழிதவறிச் செல்கின்றனர். சிற்பி திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டால் அனைத்து மாணவர்களும் செதுக்கப்பட்டு சிற்பங்களாக மிளிர்வார்கள்.