

உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2023-ல் இடம்பெற்றிருக்கும் 146 நாடுகளில் இந்தியா 127-வது இடத்தில் உள்ளது என்று உலக பொருளாதார மன்றம் அறிவித்துள்ளது.
ஆணுக்குப் பெண் நிகர் என்கிறோம். நடைமுறையில் ஆண்களுக்கு இணையான வசதி, வாய்ப்பு பெருவாரியான பெண்களுக்கு இல்லை. கல்வி, வேலைவாய்ப்பில் தொடங்கி பொருளாதார ஏற்றம், அரசியல் அதிகாரம்வரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேறுபாடு இன்றும் நீடிக்கிறது. இதுவே பாலின இடைவெளி எனப்படுகிறது.
இதை எப்படி நம்புவது? என்னை போலவே என்னை சுற்றியுள்ள சிறுமிகளும் பள்ளிக்கூடத்துக்குச் சென்று படிக்கிறார்களே என்று ஆண் குழந்தைகளுக்குத் தோன்றலாம். இன்று ஒரு மாணவனுக்குச் சமமாக ஒரு மாணவி கல்வி பெறுவது என்பது பல நூற்றாண்டு கால போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி.
இந்தியாவில் 6 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளும் கட்டாயம் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறது கல்வி உரிமைச் சட்டம். 2009-ல் இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகே பெரும்பாலான கிராமங்களில் வாழும் பெண் குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்கத் தொடங்கியது. இதேபோன்று தமிழக அரசின் ‘புதுமை பெண்’ திட்டத்தின் மூலம் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டுவருகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் லட்சக்கணக்கான பெண் பட்டதாரிகளை தமிழ்நாடு உருவாக்கி தேசத்துக்கும் உலகத்திற்கும் கொடுக்கும்.
தற்போது வெளிவந்துள்ள பாலின இடைவெளி அறிக்கையின்படி கடந்த ஆண்டு 135-வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 8 இடங்கள் முன்னேறியுள்ளது. ஆணும் பெண்ணும் சமம் என்கிற சொல் நிஜமாகும்போது இந்த இடைவெளி காணாமல்போகும்.