வீட்டிலிருந்து சூழல் அக்கறை தொடங்கட்டும்!

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

பிளாஸ்டிக் குப்பைகளை வீட்டிலேயே பொறுப்பாகப் பிரித்து மாநகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைப்பதில் பெங்களூரு மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்வது தெரியவந்துள்ளது.

கர்நாடகா பெங்களூருவில் நாள்தோறும் 6000 டன் குப்பை வெளியேற்றப்படுகிறது. இதில் வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் 60 சதவீதம் முறையாகப் பிரிக்கப்பட்ட பிறகே அப்புறப்படுத்தப்படுகிறது. இதிலிருந்து அன்றாடம் பிரிக்கப்படும் 600 டன் பிளாஸ்டிக் குப்பை உலர் குப்பை சேகரிப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதுபோக பொது இடங்களிலிருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பை 800 கிலோ மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. இதனால் பெங்களூருவில் குப்பைக் கிடங்குகளில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் செயல் முற்றிலுமாக தடுக்கப்பட்டிருக்கிறது.

முக்கியமாக ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீறி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துபவர்களிடம் அபராதம் விதிக்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கையின் மூலம் கடந்த ஓராண்டில் பெங்களூருவில் ரூ.2.4 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நேர்மாறாக சென்னையில் நாளொன்றுக்கு 38 சதவீத குப்பை மட்டுமே முறையாகப் பிரிக்கப்பட்டு வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனால் சென்னையின் கழிவு கிடங்குகள் மக்காத பிளாஸ்டிக் குப்பைகளால் நிரம்பி வழிகின்றன.

இவை ஒட்டுமொத்த மனித சமூகத்தின் எதிர்காலத்துக்கே எமனாகக் கூடியவை. நல்லதோ, கெட்டதோ எது நிகழ்ந்தாலும் என்னால் என்னவாகிட போகிறது என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பெரிய பாடம். நாம் ஒவ்வொருவரும் நினைத்தால் பூமிக்கு நன்மை பயக்க முடியும். நம் வீட்டிலிருந்து சூழல் அக்கறை தொடங்கட்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in