

சென்னை நந்தம்பாக்கத்தில் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விதமாக ரூ.370 கோடியில் நிதிநுட்ப நகரத்தை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப துறை மளமளவென வளர்ந்திருப்பதால் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு உயரிய சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு கடந்த 20 ஆண்டுகளாகக் கிடைத்து வருகிறது. இது சாத்தியமானதற்கு முக்கிய காரணம் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட பட்டப் படிப்புகள் தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கப்பட்டதே. பட்டம் கையிலிருந்தால் மட்டும் வேலை கிடைத்திடுமா? இதனை கருத்தில் கொண்டு முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி 2000-ல் சென்னையில் ‘டைடல் பார்க்’ அமைத்தார். அதனையடுத்து தமிழகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல அமைக்கப்பட்டு வேலைவாய்ப்பும் பெருகியது. இதன் அடுத்த கட்ட பாய்ச்சலாக தற்போது டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் நிதிநுட்ப துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் உலகெங்கிலும் பன்மடங்கு பெருகியுள்ளது. இந்த வாய்ப்பை தன்வசமாக்கிக் கொள்ள மாணவச் செல்வங்கள் இப்போதிலிருந்தே திட்டமிட வேண்டும்.
அதற்கு முதல் கட்டமாக செயற்கை நுண்ணறிவு, மஷின் லேர்னிங், பிளாக் செயின் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் குறித்து வகுப்பறை பாடத்துக்கு அப்பால் தேடிப் படிக்க வேண்டும். இன்றைய தேதியில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் சிறார்கள் கில்லாடிகள். அத்தகைய ஸ்மார்ட்போனில் வெறுமனே பொழுதுபோக்குவதற்குப் பதில் நிதிநுட்பத்தை மதிநுட்பத்துடன் பயில தொடங்கினால் நாளை நமதே.