சுமை களைந்து சிறகடிக்குமா கல்வி?

சுமை களைந்து சிறகடிக்குமா கல்வி?
Updated on
3 min read

புத்தகப்பைச் சுமை குறைக்கப்படும் எனத் தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சர் அண்மையில் அறிவித்தது கவனம் பெற்றது. புத்தகங்கள், குறிப்பேடுகளைத் தாண்டி இதில் கவனம் செலுத்த வேண்டிய வேறு பல அம்சங் களும் உள்ளன. பேராசிரியர் யஷ்பால் குழுவின் ‘சுமையற்ற கற்றல் அறிக்கை’ பாடத்திட்டம் தொடங்கி புத்தகப்பைச் சுமை வரை தேவையான மாற்றங்களை 1993லேயே பேசியது.

அதன்பிறகு ஏராளமான அறிக்கைகள் வந்துவிட்டன. தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (என்சிஇஆர்டி) வெளியிட்ட, ‘புத்தகப்பை கொள்கை 2020’ இந்தச் சிக்கலைப் பற்றி முழுமையாகவும் தேவையான மாற்றங்களைப் பற்றியும் கூறியது. சில மாநிலங்களைத் தவிர, இந்தச் சிக்கல் மீது கவனம் செலுத்தப்பட வில்லை.

புத்தகப்பையின் சுமை பெரும்பாலும் அரசு, அரசு உதவிபெறும் மாணவர் சார்ந்தது. வீட்டிலிருந்து அரசுப் பேருந்து நிறுத்தம், இறங்க வேண்டிய நிறுத்தத்திலிருந்து பள்ளிவரை புத்தகப் பையைச் சுமந்து செல்லும் குழந்தைகள் படும்பாட்டை அரசுப் பேருந்தில் பயணிப்பவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

பாடத்திட்டம், பாடநூல், பள்ளிப்பார்வை நடைமுறைகளை உருவாக்குபவர்கள், அதிகாரிகள் எனக் கல்வித் துறையின் அனைத்து நிலைகளில் இருப்பவர்களும் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவரின் புத்தகப்பையைத் தூக்கிக்கொண்டு அரசுப் பேருந்தில் பள்ளி வரை ஒரு முறை சென்று பார்த்தாலே இந்தச் சிக்கலை எளிதில் உணர்ந்துகொள்வார்கள்.

பையா? மூட்டையா?

புத்தகப் பைக்குள் அதிகபட்சமாக என் னென்ன இருக்கும்? பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள், உரை நூல்கள், பயிற்சிப் புத்த கங்கள், வீட்டுப் பாட ஏடுகள், தேர்வு ஏடுகள், கட்டுரைப் பயிற்சி ஏடுகள், நில வரைபட நூல், கணித வரைபடப் புத்தகம், ஓவியப் பயிற்சி ஏடு, அறிவியல் செய்முறைப் பயிற்சி ஏடு, நாள்குறிப்பேடு, எழுதுபொருள்கள், கணிதக் கருவிப்பெட்டி, உணவு, தண்ணீர் போன்றவை.

அவ்வளவும் சேர்ந்துதான் குழந்தைகளை மூட்டைத் தூக்க வைத்திருக்கின்றன. நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை இல்லாமல், குழந்தைகள் விதவிதமாக நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். உயர் கல்வியில் சுமையே இல்லாமல், பள்ளிக் கல்வியில் மட்டும் புத்தக மூட்டைச் சுமையை ஏற்றி வைப்பது முரண்.

அரசு வழங்கும் குறிப்பேடுகளைத் தவிர வீட்டுப்பாடம், தேர்வு எனத் தனித்தனியான குறிப்பேடுகளை வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பு கின்றனர். பள்ளிப் பார்வையிடல் என்பது, குழந்தைகள் பாடங்களை எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள், ஆசிரியர், மாணவர் சந்திக்கும் சிக்கல்கள் என்பது போன்றவற்றை அறிந்துகொண்டு தீர்வு காண முயல்வதாக இல்லை.

குழந்தைகள் குறிப்பேடுகளில் எழுதி இருக்கிறார்களா, ஆசிரியர்கள் திருத்தி இருக்கிறார்களா என ஆவணங்களைச் சரிபார்த்தலாகவே அது இருக்கிறது. ஆவணங்களைப் பார்ப்பதால் அவை கவனமுடன் உருவாக்கப்படுகின்றன. குழந்தை களை, கற்றல் அடைவுகளைப் பார்த்தால், அவற்றின் மீது கவனம் கூர்மையாகும்.

அதுதானே கல்வி. ஒவ்வொருவரின் மீதும் நம்பிக்கை வேண்டும். பணியில் மேல் படியில் இருப்பது என்பது அதிகார மட்டம் அல்ல. அக்கறையான பொறுப்பு. மாணவர் மீது ஆசிரியர், ஆசிரியர் மீது தலைமையாசிரியர், அலுவலர் என எல்லா மட்டங்களிலும் நம்பிக் கைப் பூக்கள் மலர வேண்டும். அவரவர் பொறுப்பை உணர்ந்து குழந்தைகளின் கற்றலை பொறுமையோடு கவனித்தால் ஒவ்வொரு மாணவரும் மலர்வார்.

வீட்டுப்பாடம்

குழந்தைகளுக்கு அதிக நேரம் எழுதும் வீட்டுப்பாடங்களைக் கொடுப்பதே சிறந்த பள்ளி என நம்பப்படுகிறது. ‘மாலை முழுதும் விளையாட்டு' என்பதும் மனப்பாடப் பாட்டாகி விட்டதே என வருந்திக்கொண்டே, பத்து முறை எழுதிவரச் சொல்கிறோம். குழந்தை களோடு கலந்துரையாட, விளையாட, அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ளவும் இயலாத பெரியவர்கள் தப்பித்துக்கொள்ளக் கண்டறியப்பட்டதே குழந்தைகளை அளவுக்கு மீறி எழுதவைக்கும் செயல்.

நமது கல்வி முறை, கற்பித்தல் முறை சார்ந்து பல்வேறு மட்டங்களில் கலந்துரை யாடல்களை நிகழ்த்த வேண்டும். அவற்றைக் குழந்தைகளிடம் இருந்து தொடங்க வேண்டும். செயல்வழியில் புரிதலை உரு வாக்குவதாகக் கல்வி மாற வேண்டும்.

பாரமில்லாக் கல்வி

நம் நாட்டில் இதுவரை பல்வேறு அரசு அறிக்கைகள் புத்தகப்பைச் சுமையைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை விரிவாக எடுத்துக்கூறியுள்ளன. புகழ்பெற்ற ஓவியர் ஆர்.கே. லக்ஷ்மண் புத்தகப்பை குறித்து 1980களில் வரைந்த கேலிச்சித்தி ரங்கள் அத்தகைய அறிக்கைகளில் இடம் பெற்றன.

2020 ஆண்டு வெளியான புத்தகப்பை கொள்கை அறிக்கையின்படி, குழந்தைகள் தங்கள் எடையில் 10% அளவு எடையை மட்டுமே சுமக்கலாம். புத்தகப்பைச் சுமை என்பது புத்தகங்கள், குறிப்பேடுகள் போன்ற பொருள்களின் சுமை மட்டுமல்ல.

பெற்றோர், அதிகாரிகளாகவே இருக்கும் அலுவலர், ஆசிரியர், நமது கல்வி முறை ஆகிய அனைத்தும் சேர்ந்த பெருஞ்சுமை. வருங்காலத் தலைமுறை மீது அக்கறையோடும் நம்பிக்கையோடும் காலங்காலமாக நாம் சேர்த்த சுமைகளை விலக்கிக் குழந்தைகளுக்குக் கற்றலைக் கொண்டாட்டமாக ஆக்குவோம்.

சில ஆலோசனைகள்

* 10ஆம் வகுப்புவரை முப் பருவப் புத்தக முறை எனக் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு எனப் பாடநூல்களைப் பிரித்து வழங்க லாம்.

* அரசால் வழங்கப்படும் ஐந்து பாடக்குறிப்பேடு களைத் தவிர, வேறு குறிப்பேடுகளைத் தவிர்க் கலாம்.

* பாடங்களுக்கான வினா விடைகளை வகுப்பறை யில் கலந்துரையாடி எழுதலாம். உரைநூல் வாங்குவதைக் கட்டாயமாகத் தடைசெய்ய வேண்டும்.

* ஒரு நாளுக்கு ஒரு பாடத் துக்கு மட்டும் வீட்டுப் பாடம் வழங்கலாம்.

* வீட்டு வேலைத் தவிர, மற்றபாடங்கள் சார்ந்தவற்றைப் பள்ளியி லேயே வைத்துச் செல்லும் வசதியை ஏற் படுத்தலாம்.

* மை பேனாவால் எழுதி அழித்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய அட்டை களைப் பயன்படுத்தலாம்.

* வாரத்துக்கு ஒரு நாள் புத்தகப் பை இல்லாமல் செயல்பாடுகள், கலைப் பயிற்சிகளுக்காக ஒதுக்க லாம்.

* ஆறாம் வகுப்பிலேயே விலையில்லா மிதிவண்டி வழங்கலாம். சுற்றுச் சூழலுக்கும் உடல் ஆரோக் கியத்துக்கும் பயன் தரும்.

* தனித்தனியான குறிப்பேடு களைப் பயன்படுத்தாமல் பாடங்களுக்கு ஏற்ப இணைக்கலாம். எடுத்துக் காட்டாகக் கட்டுரைப் பயிற்சி, வீட்டுப்பாடம் ஆகியவற்றைப் பாடக் குறிப்பேட்டில் எழுத லாம்.

* பாடச்சுமையையும் குறைத்து, செயல்பாடு களை அதிகப்படுத்தலாம்.

* சத்துணவில் கூடுதல் கவனம் செலுத்தி, பள்ளியி லேயே தூய்மையான தண்ணீரையும் உறுதி செய்ய வேண்டும்.

- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், எழுத்தாளர்; artsiva13@gmail.com

சுமை களைந்து சிறகடிக்குமா கல்வி?
ஒரு விதையின் முன்னால் | என் மன வானில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in