

‘ஞாநி தியேட்டர்ஸ்' நாடக மன்றம் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சியில் உள்ள எஸ்ஆர்வி பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நாடக ஆளுமைகள், நாடவியலாளர்கள் ஞாநி, பிரளயன், வேலு சரவணன் கருணாபிரசாத், பார்த்திபராஜா போன்றோர் வருகை தந்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளனர்.
தற்போது டெல்லி நாடகப் பள்ளியில் பயிற்சி பெற்ற நாடகவியலார் மாயகிருஷ்ணன் நாடக வகுப்பு எடுக்கிறார். மற்றப் பாடங்கள் போலவே பாடவேளைப்படி நாடக வகுப்புகளும் நடைபெறுகின்றன.
கல்வியில் நாடகம்: ‘கல்வியில் நாடகம்’ என்ற கருத்துருவுடன் மாணவர்களுக்கு நாடகப் பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகிறது. ஆர்வமும் பயிற்சியும் நிறைந்த மாணவர்களைக் கொண்டு ஆண்டு இறுதியில் ஒரு புது நவீன நாடகத்தைத் தயாரித்து அரங்கேற்றுகிறது இந்தப் பள்ளி. பொதுமக்கள் கூடும் விழாக்களிலும் மாணவர்களைக் கொண்டு நாடக அரங்கேற்றம் செய்வது கூடுதல் சிறப்பு.
நாடக உத்திகளைத் திறன்பட கற்றுத் தருவதால் வகுப்பறைகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து செயல்பட முடிகிறது. தன்னம்பிக்கையும் படைப்பாக்கமும் கொண்ட நல்ல சமூகத்தை உருவாக்கிட முடியும் என்று நம்புகிறோம் என்கின்றனர் பள்ளியின் முதல்வரும் நிர்வாகிகளும்.
திறன்கள் தானாக வளர: மேலும், மாணவர்களின் தனித்திறனை வெளிக் கொணருதல், பயம், கூச்சம் தயக்கத்தைப் போக்குதல், தன்னம்பிக்கை திறன், படைப்பாற்றல் திறன், மொழித்திறன், பேச்சாற்றல் திறன், வாசிப்புத் திறன், கவன ஒருங்கிணைப்புத் திறன், திட்டமிடும் திறன், செயல்படுத்தும் திறன், பிழையிலிருந்து கற்றுக் கொள்ளும் திறன், பிழையில்லாமல் செய்துமுடிக்கும் திறன், குழுவுடன் இணைந்து செயல்படும் திறன், கதை கூறுதல் போன்ற திறன்கள் நாடகம் என்ற ஒற்றை கலையின் வழியாக வளர்த்தெடுக்கப்படுகிறது.
இதனால் மாணவர்கள் வாழ்க்கையின் எந்த சூழலிலும் பிடிப்புடன் வாழ முடியும் என்கிறார் பள்ளியின் நாடக ஆசிரியர் மாயகிருஷ்ணன்.