

திருநெல்வேலி: திருநெல்வேலியில் உள்ள இளம் சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் உள்ள 6 வயதுக்கு உட்பட்ட 27 மாற்றுத்திறன் குழந்தைகள் திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா அனுப்பப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் மாணவர்களை வழியனுப்பியதுடன் வாகனத்தையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இது குறித்து ஆட்சியர் கூறியிருப்பதாவது, “சுற்றுலாசெல்லும் 27 மாற்றுத்திறனுடைய குழந்தைகளுடன் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் என மொத்தம் 59 பேர் செல்கின்றனர்.
மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ஊக்கத்தையும், தன்னம்பிக்கையும் இந்த சுற்றுலா அளிக்கும்” என்றார். உதவி ஆட்சியர் (பயிற்சி) சு.கோகுல், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.