மத்திய பல்கலை. நுழைவுத்தேர்வு விண்ணப்பம் | 10-ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடும் பகுதி நீக்கம்: தமிழக மாணவர்கள் பிரச்சினைக்கு தீர்வு

மத்திய பல்கலை. நுழைவுத்தேர்வு விண்ணப்பம் | 10-ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடும் பகுதி நீக்கம்: தமிழக மாணவர்கள் பிரச்சினைக்கு தீர்வு
Updated on
1 min read

மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க இடையூறாக இருந்த 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் பதிவு செய்யும் பகுதியை தேசிய தேர்வு முகமை நீக்கியுள்ளது.

இதுதொடர்பாக திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எஸ்.நாகராஜன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவ, மாணவிகள் பிப்ரவரி 9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 12-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் இந்த நுழைவு தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த விண்ணப்பத்தில் 10-ம்வகுப்பு மதிப்பெண்கள் விவரம் பூர்த்தி செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு படித்த 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வு நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி வழங்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது 10-ம் வகுப்பிற்கான மதிப்பெண் பூர்த்தி செய்யப்பட வேண்டிய இடத்தில் மதிப்பெண் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் அதனை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.இது குறித்து மாணவ, மாணவிகள் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புகார் அளித்திருந்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் தேசிய தேர்வு முகமைக்கு இது குறித்து தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், தேசிய தேர்வு முகமை மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வசதியாக 10-ம்வகுப்பு மதிப்பெண்ணை பூர்த்தி செய்யும் காலத்தை நீக்கிவிட்டது. எனவே, தமிழக மாணவர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in