

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 129 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தில் அந்த பள்ளிக்கூடத்தின் சத்துணவு அமைப்பாளர், சமையல் பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் பல்லி இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சிகிச்சை முடிந்து அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர். 157 மாணவர்கள் இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்து வரும் நிலையில் அவர்களில் 80 சதவீதத்தினருக்கு இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பது மிகப்பெரும் கொடுமை.
சாதிய பாகுபாடும், வறுமையும் பல சமூக பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி பெற பெரும் தடையாக இருந்தபோது, அதை முறியடிக்க தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் 80 ஆண்டுகளுக்கும் முன்பே அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற, 43,000-க்கும் அதிகமான சத்துணவு மையங்கள் தமிழகத்தில் உள்ளன.
அவற்றில் லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சமைத்துக் கொடுக்கும் உணவு 50 லட்சம் மாணவர்களுக்கு அன்றாடம் அளிக்கப்பட்டுவருகிறது. இதனுடன் காலை சிற்றுண்டி திட்டமும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தாங்களும் நீண்ட நெடிய வரலாற்று பயணத்தின் அங்கம் என்பதையும் லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வியோடு மட்டுமல்ல உயிரோடும் சம்பந்தப்பட்ட பணியை தாம் முன்னெடுத்து வருகிறோம் என்பதையும் சத்துணவு ஊழியர்கள் உணர்ந்து செயல்பட பள்ளிக்கல்வித்துறை ஆவன செய்ய வேண்டும்.