

மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் இந்த வரிசையை அறியாதோர் இருக்க முடியாது. இதில் நட்புக்கு எத்தனையாவது இடம்? இச்சமூகத்தில் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு வகையில் நட்பு என்னும் உறவின் பிடியிலிருந்து வருகிறோம்.
நட்புகளே இல்லாத மனிதர்களை காண்பது மிகவும் அரிது. சொந்தங்களுக்கும் மேலான உறவுதான் நட்பு என்று நாமே பலமுறை நினைத்ததுண்டு. இந்த உன்னதமான உறவால் என்றும் நன்மையே என நினைப்பது தவறு அதை குழந்தைகள் எவ்வழியில் எடுத்துச் செல்கிறார்கள் என்பதில்தான் நன்மை தீமை அமைந்துள்ளது.
குழந்தைகளே நட்பினால் முடியாத செயல் என்று இங்கு ஏதும் இல்லை. ஆனால், நன்மை தீமை ஆராய்ந்து அறியும் பக்குவம் இல்லாத இந்த வயதில் உங்கள் பெற்றோரை முன்னிலைப்படுத்தி உங்களது நட்பினை எடுத்துச் செல்லுங்கள். அத்தகைய நட்பு மட்டுமே உங்களை கடைசிவரை காப்பாற்றும்.
ஆற்றாமையில் பெற்றோர்: மாணவர்களின் பெற்றோரிடம் உரையாடும் சம்பவம் ஒவ்வொரு ஆசிரியரின் அனுபவத்திலும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அதில் பெரும்பாலும் கல்வி மற்றும் ஒழுக்கம் சார்ந்தவையாகவே இருக்கும். குழந்தைகளிடம் காணப்படும் சிறிய மாற்றம் கூட பெற்றோர்களின் மனதை பெருமளவில் பாதிக்கும் என்று அன்றுதான் உணர்ந்தேன்.
அன்று தொலைபேசியில் கேட்ட ஒரு சில நெகிழ்வான வார்த்தைகள், “மேம் என் பையன் முன்ன போல் இல்லை, ரொம்ப மாறிட்டான். என் பெண் குழந்தையை விட இவன் மேல் அதிக பாசம் வைத்து இருப்பேன். அவன் தந்தையிடம் கூடஇல்லாமல் என்னிடமே அனைத்தையும் கேட்டு செய்வான்.
ஆனால், இப்போதெல்லாம் என்னிடம் கேட்காமல் செய்வது என்னை எதிர்த்துப் பேசுவது, கோபம் கொண்டு பேசாமல் இருப்பது போன்ற செயல்களில் அதிகமாக ஈடுபடுகிறான். இவற்றை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நீங்கதான் எடுத்து சொல்லி புரிய வைக்கணும்” என்று அழும் நிலையில் பேசிய அந்த குரலுக்கு ஆறுதல் கூறி முடித்தேன்.
ஏன் இந்த தவறான மாற்றம்? - பெற்றோரிடம் என்றும் மரியாதையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் குழந்தைகளுக்குத் தோன்றவில்லை?
பொதுவாக வளரிளம் குழந்தைகளுக்கு தன் வயதில் உள்ள தன்னைப் போன்ற சிந்தனை கொண்ட சக மாணவனின் மீது அதீத நம்பிக்கை ஏற்படும். இந்த நம்பிக்கை தவறில்லை. ஆனால், இது என்றும் தவறான வழியில் செல்லாமல் தடுப்பது முக்கியம். அதுவே ஆசிரியர் மற்றும் பெற்றோரின் கடமையாக உள்ளது.
மாணவ மற்றும் ஆசிரியருக்கு இடையிலான உரையாடல் கல்விக்கு எவ்வளவு முக்கியமோ அது போன்று பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உரையாடல் அக்குழந்தையை நல்வழிப்படுத்த மிகவும் முக்கியம்.
உன் நண்பனும் உன் வயதில் உள்ள உன்னைப் போன்ற ஒரு குழந்தையே அப்படியிருக்க உன்னால் எடுக்க முடியாத ஒரு முடிவை உன் நண்பனால் எடுக்க முடியும் என நினைப்பது முட்டாள் தனமே. அப்படியே உனக்கு ஒரு தீர்வுகிடைத்தாலும் அது உன் தற்கால சந்தோஷத்திற்காகத் தானே தவிர எதிர்கால நன்மைக்காக அமையாது. நமக்கானவற்றை செய்து கொடுத்துநமக்காக என்றும் நம்முடன் இருக்கும் பெற்றோர்தானே என்ற அலட்சியத்தை கைவிடுங்கள்.
உங்கள் கஷ்டங்களை யார் வேண்டுமானாலும் காது கொடுத்து கேட்கலாம், உங்கள் கவலைகளை நண்பனிடம் எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், அதற்கு தீர்வு என்பது உங்கள் பெற்றோர் மூலமாக மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்த்திடுங்கள் குழந்தைகளே.
- கட்டுரையாளர்: கணிதத் துறை ஆசிரியர், எஸ்.ஆர்.வி சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, திருச்சிராப்பள்ளி.