நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 28: வங்கியில் சேமித்தால் பணத்தின் மதிப்பு குறையுமா?

நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 28: வங்கியில் சேமித்தால் பணத்தின் மதிப்பு குறையுமா?
Updated on
2 min read

கடந்த அத்தியாயத்தை வாசித்த சேலம் அரசு பள்ளி ஆசிரியர் சகாயராஜ், 'வங்கியில் சேமித்தால் பணத்தின் மதிப்பு குறையுமா? எப்படி? வங்கி முத‌லீட்டு திட்டங்களை பணவீக்கம் எவ்வாறு பாதிக்கிறது?' உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கு முதலில் பணவீக்கம் என்றால் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

பணவீக்கத்துக்கு பல்வேறு வகையான வரையறைகளை பொருளாதார நிபுணர்கள் வகுத்திருக்கிறார்கள். சாமானியர்களின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விலைவாசி அதிகரித்தால் அதன் பெயர் பணவீக்கம் (Inflation). இதனை பணத்தின் மதிப்பு வீழ்ச்சி எனவும் கூறலாம்.

மதிப்பைக் குறைக்கும் வீக்கம்: ரூபாயின் வாங்கும் திறன் குறைந்தால் விலைவாசி அதிகரிக்கும். ரூபாயினுடைய வாங்கும் திறன் இரண்டு வகைகளில் குறைகிறது. ஒன்று, தேவைக்கு அதிகமாக ஒரு பொருளை உற்பத்தி செய்தால் அதன் மதிப்பு குறையும். மற்றொன்று, தேவைக்கும் குறைவாக ஒரு பொருள் உற்பத்தி செய்தால் அதன் மதிப்பு உயரும். அதிக விலை கொடுத்து வாங்குவதால் பணத்தின் மதிப்பு குறைகிறது. இதை சமாளிக்க, அரசு அதிகளவில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும். அதனால் பணவீக்கம் ஏற்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் பல்வேறு காரணங் களினால் ரூபாயின் வாங்கும் திறன் கணிசமாகக் குறைகிறது. இதனால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைவாசி அதிகரிக்கிறது. இதன் விளைவாக பணவீக்க விகிதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாட்டின் பணவீக்க விகிதம் சில்லறை விலையில் 7 சதவீதத்தைக் கடந்துவிட்டது.

மொத்த விலையில் 10 சதவீதத்தையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பணவீக்க விகித‌ம் சீராக இருந்தால், நாடு முன்னேறும். பணவீக்க விகித‌ம் அதிகரித்துக் கொண்டே சென்றால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவேதான், இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பணவீக்கம் 2 முதல் 6 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

பண வீக்கத்தின் பாதிப்புகள்: பணவீக்கம் அதிகரிப்ப‌தால் அன்றாட வாழ்வாதார செலவினங்கள் அதிகரிக்கிறது. இதனால் சம்பாதிக்கும் வயதில் இருப்பவர் களை விட குழந்தைகளும், முதியவர்களுமே அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். உதார ணமாக, 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் கல்லூரி படிப்புக்காக பெற்றோர் ரூ.1 லட்சம் சேமிப்பதாக வைத்துக் கொள்வோம்.

7 ஆண்டுகள் கழித்து ரூ.1 லட்சம் தேவைப்படும் என எதிர்பார்த்த நிலையில், பணவீக்கத்தால் கல்லூரி கட்டணம் ரூ.1.50 லட்சமாக அதிகரித்திருக்கும். இதனால் மாதாமாதம் தவறாமல் சேமித்து வந்திருந்தாலும், மாணவியின் கல்லூரி படிப்புக்கான செலவை பூர்த்தி செய்ய‌ முடியாமல் போகலாம்.

இதேபோல 50 வயதில் இருப்ப‌வர்கள் ஓய்வு காலத்துக்காக வங்கியில் 10 ஆண்டுகள் மாதம் 5 ஆயிரம் சேமிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். 10 ஆண்டுகள் கழித்து, பணவீக்கத்தின் காரணமாக அன்றாட செலவினங்கள் அதிகரித்திருக்கும். மருந்து, மாத்திரையின் செலவு, சிகிச்சை செலவு எல்லாம் அதிகமாகி இருக்கும். அதனால் முதுமை காலத்தில் அன்றாட தேவைகளை மட்டுமல்லாமல் அவசர தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படலாம்.

வெல்வது எப்படி? - பணவீக்கத்தை கணிப்பது சாதாரண விஷயம் அல்ல. அதனால் அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படக் கூடிய செலவினத்தின் துல்லியமதிப்பை கண்டறிவதும் கஷ்டமே. எனவே பணவீக்கத்தை வீழ்த்தும் முதலீடுகளில் ஈடுபடுவதே ஒரே வழி ஆகும்.

வங்கி சேமிப்பு, தொடர் வைப்பு, நிரந்தர வைப்பு, வருங்கால பொது வைப்பு ஆகியவற்றில் அதிகபட்சம் 8 சதவீதம் வரை மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது. பண வீக்கம் 10 சதவீதமாக உள்ள நிலையில் 8 சதவீத வட்டி கிடைத்தால் எதிர்கால செலவினத்தை எப்படி சமாளிக்க முடியும்?

தீர்வுக்கு வழி: எனவே எதிர்கால பண தேவையையும், பணவீக்கத்தையும் கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் 15 சதவீதம் வட்டி வரும் முதலீடுகளில் ஈடுபட வேண்டும். அதுவே பணவீக்கத்தை வெல்வதற்காக சிறந்த வழி ஆகும். பங்கு சந்தை முதலீடு, பரஸ்பர நிதி திட்டங்கள், கடன் பத்திரங்கள் உள்ளிட்ட வற்றில் முதலீடு செய்தால் ஓரளவுக்கு அதிக வ‌ருமானம் கிடைக்கும்.

இதன் மூலம் பணவீக்க பாதிப்புகளில் இருந்து நம்மை எதிர்காலத்தில் காப்பாற்றிக் கொள்ளலாம். அதேவேளையில் மேற்கூறியவற்றில் முதலீடு செய்வதில் ஆபத்தும் உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

(தொடரும்)

- கட்டுரையாளர் தொடர்புக்கு : vinoth.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in