

இங்கிலாந்து பிரிஸ்டல் நகரில் 1821 பிப்ரவரி 3-ம் தேதி எலிசபெத் பிளாக்வெல் பிறந்தார். 17 வயதில் தந்தையை இழந்து குடும்ப சுமையை ஏற்கத் தொடங்கினார். பிறப்புறுப்பு தொற்று சிகிச்சைக்காக ஆண் மருத்துவரிடம் சென்ற இவரது தோழி அத்துறையில் பெண் மருத்துவர் இல்லையே என வருந்தினார். அதுவே மருத்துவம் படிக்கும் உந்துதலை எலிசபெத்துக்கு ஏற்படுத்தியது. 12 மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பித்தார். ஆண்கள் மட்டுமே மருத்துவம் படித்த காலம் என்பதால், இவரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக, நியூயார்க் ஹோபர்ட் கல்லூரியில் ‘ஒரு பெண்ணை சேர்ப்பதா, வேண்டாமா?’ என்று 150 மாணவர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வென்றார். 1849-ல் மருத்துவப் பட்டம் பெற்றார்.
குழந்தைக்கு சிகிச்சைஅளித்துக் கொண்டிருக் கையில் தவறுதலாக ரசாயனம் தெறித்து ஒரு கண்ணில் பார்வை இழந்தார். இதனால், இவர் அறுவை சிகிச்சை நிபுணராகும் கனவு கானல் நீரானது. நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றினார். பெண்களின் உடல், மன வளர்ச்சி குறித்து புத்தகம் வெளியிட்டார். இவரது தீவிர முயற்சியால், ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் மெடிக்கல் ஃபார் வுமன்’ என்ற கல்வி நிறுவனம் 1874-ல் தொடங்கப்பட்டது.