

கிழவிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களை அப்பள்ளி ஆசிரியர்கள் கழிவறை சுத்தம் செய்ய வைத்ததால் பள்ளி கதவை பூட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிழவிபட்டியில் உள்ள அரசு பள்ளிக்கூட வளாகத்தில் கழிவறையை சுத்தம் செய்யுமாறு அப்பள்ளி மாணவர்களை தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர். இது பற்றிதங்களது பெற்றோரிடம் மாணவர்கள் புகார் அளிக்க ஆத்திரமடைந்த பொது மக்கள் மாணவர்களுடன் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கினர்.
கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதில் மாணவர்களின் புகாரில் உண்மை உள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில், தலைமையாசிரியரை இடமாற்றம் செய்தால் மட்டுமே பள்ளிக்குத் திரும்புவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கழிவறை சுத்தப்படுத்த மாணவர்களை கட்டாயப்படுத்தும் குற்றம் தமிழ்நாட்டில் நடப்பது இது முதல்முறை அல்ல. நாளைய இந்தியா என்று மாணவச்செல்வங்களை அன்றாடம் அழைக்கும் இதே நாட்டில்தான் இத்தகைய கொடுமை மாணவர்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றம் அளித்தால் மட்டும் அவர்கள் திருந்திவிட போவதில்லை.
பட்டியலின மாணவர்களை மட்டுமல்லாமல் எந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களானாலும் இத்தகைய இழி செயலை செய்ய நிர்ப்பந்திப்பவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும். சிறார் நீதி சட்டம் பள்ளிதோறும் அமல்படுத்தக் குழந்தைகள் நல அமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டும்.