

உதகை: நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் உறை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அவலாஞ்சி, தலைகுந்தா, எமரால்டு ஆகிய பகுதிகளில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனஸ் 2 டிகிரியாக பதிவாகியுள்ளது. கடுங்குளிரை போக்க பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். மேலும் தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நேற்று புல்வெளிகள் மீது வெண்மையை போர்த்தியது போல் பனித்துளிகள் உறைந்து காணப்பட்டன. புல்வெளிகளில் எங்கு பார்த்தாலும் உறைபனி கொட்டி கிடந்தது. மேலும் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மீது உறைபனி படர்ந்து இருந்தது. குழந்தைகள் வாகனங்கள் மீது பனி படர்ந்து இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்து, உறைபனியை கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர். பொதுமக்கள் குளிரை தாக்குப்பிடிக்க கம்பளி ஆடைகளை அணிந்து வெளியே வருகின்றனர்.