

ஒரே நேரத்தில் 5000 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சென்னையில் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி, கலை, விளையாட்டு, ஒழுக்கம் ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதில் குறிப்பாக மாணவர்களை நல்வழிப்படுத்திட சிற்பி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தில் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வரும் 5000 மாணவர்கள் இணைந்தனர். இந்த மாணவர்களுக்கு கல்வியுடன் சட்ட ஒழுங்கும் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வாரந்தோறும் புதன்கிழமை சிற்பி திட்ட மாணவ-மாணவிகளுக்குக் காவல் துறை அதிகாரிகள் சிறப்பு வகுப்பு எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிற்பி திட்ட மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. ஒரே நேரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 5000 பேர் யோகா செய்ததன் மூலம் உலக சாதனை படைத்திருக்கிறார்கள்.
இதற்காக உலக சாதனை யூனியன், தமிழக இளம் சாதனையாளர்கள் சாதனை புத்தகம், உலக இளம் சாதனையாளர்கள் சாதனை புத்தகம் ஆகிய 3 அமைப்புகள் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை நமது மாணவர்கள் அனுதினமும் படைத்திட வேண்டும். இதன் மூலம் நாளைய இந்தியா நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் மன நலத்துடனும் உருவெடுக்க முடியும்.