சென்னையில் வரும் 12-ல் முதல்வர் பரிசு வழங்குகிறார்: கலைத்திருவிழாவில் மாநில அளவில் வென்ற மாணவர்கள்
சென்னை: அரசு பள்ளிகளுக்கான கலைத்திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களுக்கு வரும் 12-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்.
இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் க.இளம்பகவத் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியசுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
2022-23-ம் ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் அரசுநடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெற்று முடிந்துள்ளது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 12-ம் தேதி நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார். எனவே, போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியரை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்கள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி பரிசளிப்பு விழாவிற்கு அழைத்து வர வேண்டும்.
பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோரிடமிருந்து அனுமதிக் கடிதம் பெற்று, அவர்கள் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும். போட்டிகளில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களை வரும் 10-ம் தேதி இரவு மாவட்டங்களில் இருந்து அழைத்துக் கொண்டு 11-ம் தேதி காலை சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வர வேண்டும். விழாவில் கலந்து கொள்ளும் மாணவிகளுடன் பெண் ஆசிரியர்கள் மட்டுமே கண்டிப்பாக வர வேண்டும்.
சென்னை கோயம்பேடு புறநகர்பேருந்து நிலையம், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் கலைத் திருவிழா உதவி மையங்கள் செயல்படும். ரயில், பேருந்து, மினி பேருந்து மூலம் சென்னை வரும் அனைத்து வெற்றியாளர்களையும், உடன் வரும் ஆசிரியர்கள் உதவி மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
