

சென்னை: ஜெஇஇ உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு உதவி செய்ய பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் க.இளம்பகவத் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் நுழைவுத்தேர்வுகள் எழுதி உயர்கல்வி படிப்புகளில் சேர வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு வழிகாட்ட பல்வேறு முயற்சிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் ஆர்வமுள்ள அரசு பள்ளிகள் மாணவர்கள் சரியான நேரத்தில் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள், கடைசி நாள், கட்டண விவரம் உள்ளிட்ட தகவல்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த என்எஸ்எஸ் தொடர்பு அதிகாரிகள் வாயிலாக என்எஸ்எஸ் மாணவர்கள் ஜனவரி 4 முதல் விண்ணப்பங்களை பூர்த்திசெய்ய மாணவர்களுக்கு உதவுவார்கள். இதற்கான முன்தயாரிப்புக்காக அந்தந்த மாவட்டத்தில் உள்ள என்எஸ்எஸ் மாணவர்கள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை தொடர்புகொள்வர். அவர்கள் ஜனவரி 4 முதல் 31 வரை பள்ளிகளுக்கு நேரில் வந்து நுழைவுத்தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய உதவி செய்வார்கள்.
தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் உயர்கல்வி தொடர்பான நுழைவுத்தேர்வு விருப்பங்களை கேட்டறிந்து அவர்களை என்எஸ்எஸ் மாணவர்களுடன் அமர்ந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தல் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ பதிவுகளை காண்பித்து மாணவர்களிடையே விருப்பங்களை உண்டாக்கி ஜெஇஇஉள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.