

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னையில் நேரடியாக செயல்பட்டு வரும் நான்கு கல்லூரிகளில் காகிதம் இல்லா செயல் திட்டம் 2023 ஜூலை மாதம் முதல் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி ஆகியவற்றில் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம் குறைந்த செலவிலும், குறைந்த நேரத்திலும் பல பணிகளை செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதென்ன காகிதம் இல்லா செயல்திட்டம்? பெருவாரியான பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங் களில் இன்றும் முக்கிய பணிகள் அச்சடிக்கப்பட்ட சுற்றறிக் கைகள், ஆவணங்கள் மூலமாக நிறைவேற்றப்படுவது வழக்கொழியவில்லை.
உதாரணத்துக்கு பேராசிரியர் ஒருவர் ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய தொழில்நுட்பக் கருவியை துறைக்கென வாங்க நினைத்தால் பக்கம் பக்கமாக ஆவணங்களை தயாரித்து காகித வடிவில் சமர்ப்பித்தாக வேண்டும். இனி இந்த அவஸ்தைக்கு அவசியமில்லை என்ற முடிவை அண்ணா பல்கலைக் கழகம் எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.
இந்நிலையில், பாட வேளைக்கான அட்டவணை, தேர்வு முடிவுகள், ‘அசைன்மென்ட்’கள் மட்டுமின்றி மாணவர்கள் குழுவாக சேர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், வகுப்பா சிரியர்களின் வழிகாட்டுதலை பெறுதல் இவை அத்தனையையும் ஆன்லைன் வழியாக பெற்று பயனடைய வழி செய்யப்பட்டுள்ளது. பொன்விழா ஆண்டை கொண்டாடவிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதன் முன்னாள் மாணவர்கள் அளித்திருக்கும் பரிசு இத்திட்டம் என்பது கூடுதல் சிறப்பு.