ஆறாம் விரலாகட்டும் குறிப்பு நோட்டு!

ஆறாம் விரலாகட்டும் குறிப்பு நோட்டு!
Updated on
1 min read

“டீச்சர் ரெட் பலூன் திரைப்படம் புத்தகமா இருக்குன்னு சொன்னீங்களே கொண்டு வந்தீங்களா படிக்க!” என்று 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் என்னிடம் வந்து எத்தனையாவது முறை கேட்டான் என்று எனக்கு நினைவுக்கு வரவில்லை. “சாரிடா! நாளைக்கு கொண்டுவருகிறேன்” என்று கூறுவதோடு என் நினைவு நின்றுவிடுகிறது.

வகுப்பறையில் மாணவர்களும் வீட்டுப்பாடம் ஏன் செய்யவில்லை என்று கேட்டால், “என்ன வீட்டுப்பாடம் என்றே நினைவுக்கு வரவில்லை டீச்சர். அதுதான் செய்யல என்கிறார்கள்.”

தகவல் தொழில்நுட்பப் பெருக்கத்தால் ஒருநாளின் பெரும்பான்மையான நேரத்தில் நாம் விரும்பியோ விரும்பாமலோ தகவல்களை பெற்றுக் கொண்டே இருக்கிறோம். தகவல்களின் அழுத்தத்தில் நினைவுகள் ஆழமாக இல்லாமல் அன்றாடச் செயல்களில் நமக்கு பிரச்சனைகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன.

ஒரு டைரியை பையிலேயே வைத்திருந்து செய்ய வேண்டிய வேலைகள் பற்றிய நினைவு வரும்போதெல்லாம், உடனே குறிப்பு எழுதி வைப்பதை இப்போது பழகி வருகிறேன்.

என் வகுப்பறையில் பிள்ளைகளிடமும் சின்ன குறிப்புநோட்டு ஒன்று வாங்கி வைத்துக் கொண்டு வீட்டுப்பாடத்தை குறித்துச் செல்லுங்கள், வீட்டுப்பாடத்தைச் செய்து முடித்துவிட்டால் பிறகு காலையில் மகிழ்ச்சியாக பள்ளிக்கு வரத்தோன்றும் என்றேன்.

ஆறாம் வகுப்பு மாணவர்கள் சிலர் தற்போது பாடவேளை முடிவில் தரும் வீட்டுப்பாடத்தை குறிக்க, பாக்கெட்டில் உள்ள குறிப்புநோட்டை ஸ்டைலாக எடுத்து எழுதிவைக்கின்றனர்.

வீட்டுப்பாடம் செய்யாமல் வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருக்கிறது. இந்தக் குறிப்பு எழுதுதலை சிறிது சிறிதாக நாட்குறிப்பு எழுதும் விதமாக மாற்றியமைக்க வேண்டும். - ஆர்.உதயலஷ்மி, ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in