

சென்னை: சென்னை மாநகராட்சி மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் 600 பேருக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் துறை, இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை, தூய்மை இந்தியா இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை வேப்பேரி பெண்டிங் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. அதில் மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் பங்கேற்று குப்பைகளை வகை பிரித்து வழங்குவதன் அவசியம், முறையாக சோப்பு உபயோகித்து கை கழுவும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதிப்புகள் குறித்தும் விளக்கினார். பின்னர், இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் எக்ஸ்நோரா தொண்டு நிறுவனம் சார்பில் 600 மாணவிகள் மற்றும் 50 ஆசிரியர்களுக்கு துணியால் ஆன மஞ்சப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிறுவன துணைப் பொது மேலாளர் வி.குமார், எக்ஸ்நோரா தொண்டு நிறுவன தலைவர் கே.எஸ்.எஸ்.செந்தூர் பாரி, பள்ளித் தலைமை ஆசிரியை என்.மரியன் உஷா ராணி ஆகியோர் கலந்துகொண்டனர் .