தமிழகத்தில் 17-வது புதிய சரணாலயம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழகத்தில் 17-வது புதிய சரணாலயம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 17-வது புதிய சரணாலயமாக காவிரி தெற்கு வன விலங்குகள் சரணாலயத்தை அறிவிப்பதில் தாம் பெருமிதம் கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் 17-வது புதிய சரணாலயமாக காவிரி தெற்கு வனவிலங்குகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துமுதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், “காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்தை' புதிய சரணாலயமாக தமிழக அரசு அறிவித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தின் பணிகளில் இது குறிப்பிடத்தக்க நடவடிக்கை ஆகும்.நமது மாநிலத்தின் வளமான பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் இந்த பணி நீண்ட தூரம் செல்லும்" என பதிவிட்டுள்ளார்.

புதிய சரணாலயம் குறித்து நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களைச் சுற்றியுள்ள காவிரி தெற்கு பகுதிகளில் உள்ள 686.405 சதுர கிலோ மீட்டர் பாதுகாக்கப்பட்ட காடுகளாகவும், அந்தப் பகுதி வன விலங்குகள் சரணலாயமாகவும் அறிவிக்கப்படுகிறது. புதிதாக காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயம், கர்நாடகாவில் ஏற்கனவே உள்ள காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தை இணைக்கும் வகையில் அமைகிறது.

இந்த பகுதி, தென்னிந்தியாவில் ஒரு முக்கியமான தாவர வகைகள் மற்றும் யானைகளின் வாழ்விடமாக உள்ளது. நீரில் வாழும் மென்மையான ஓடுகள் கொண்ட ஆமைகள், நீர்நாய், சதுப்பு நில முதலை போன்ற உயிரினங்கள் உள்ளன. இப்புதிய சரணாலயத்தில் பல்லுயிர் பெருக்கத்தில் குறைந்தது 35 வகையான பாலூட்டிகளும், 238வகையான பறவைகளும். பலவகையான ராட்சத அணில்களும், மென்மையான தோல் கொண்ட நீர்நாய், சதுப்பு முதலை, நான்கு கொம்புகள் கொண்ட மிருகம், சிறிய மீன், கழுகு உள்ளிட்ட பல உயிரினங்கள் உள்ளன என வனத்துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in