

மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது. நேற்றைய தினம் இன்று இருப்பதில்லை. கடந்த நொடியினை மீண்டும் பெற முடியாது. மாற்றம் என்பது காலநிலையில் மட்டுமல்ல; மனிதனின் மனத்திலும் மாற்றம் வேண்டும். ஏதோ ஒரு காரணத்திற்காக சகோதர, சகோதரிகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கலாம். மனதில் மாற்றம் ஏற்பட்டு மீண்டும் அவர்களிடம் மனம் விட்டுப் பேசுகின்ற மனோநிலை ஏற்பட வேண்டும். சின்ன சின்னஞ்சிறு காரணங்களுக்காக சக ஊழியர்களிடம் கோபப்பட்டு இருக்கலாம்; "விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை". எனவே கோபப்படும் மனோநிலையை மாற்றிக் கொள்வதில் தவறில்லை.
நிர்வாகப் பொறுப்பினில் இருக்கும்போது மாற்றுக் கருத்துக்கள் வந்தால் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. மாற்றுக் கருத்துகளே நிர்வாகத்தின் மேம்பாட்டினை கொண்டுவர மூல காரணமாக இருக்கின்றன. சுற்றி வருகின்ற பூமிகூட ஒரு நொடிப் பொழுதும் நிலையாக இருப்பதில்லை. நேற்றுபூத்த அதே பூ. இன்றுஅந்தச் செடியில் நிலையாக இருப்பதில்லை. மாணவனும் அப்படியே என்பதை ஆசிரியர்கள் நாம்தான் உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஆசிரியரின் முயற்சி: கடந்த ஆண்டு நன்கு படிக்காத மாணவன் இன்று நன்கு படிக்க வேண்டும் என்று முயற்சிக்கலாம். அவனுக்கு ஒரு தூண்டுகோலாக இருந்து தன்னம்பிக்கை கொடுத்து அவனது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதே ஒரு ஆசிரியரின் தலையாயப் பணி. ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனைப் பார்த்து, “உனக்கு ஐந்தாவதிலேயே எழுத்துக்கூட்டி வாசிக்க தெரியாது. இப்போ என் உயிரை எடுக்க வந்துட்டியா?" என்று கூறிடாமல், “உனக்கு ஐந்தாவதிலும் நான்தான் தமிழ் பாடம் எடுத்தேன். அப்போது படிக்க தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. இப்போது நீ மிகவும் வளர்ந்துவிட்டாய். உன்னால் முடியும்! முயற்சிசெய்; நான் உனக்குத் துணையாக இருக்கிறேன்"என்று கூறி அவனதுமனதில் மாற்றத்தினை ஏற்படுத்தும் அபரிமித மான ஆற்றல் ஆசிரியரின் சொல்லுக்கு உண்டு.
“எப்பொழுதுமே சாத்தியம் மாணவரின் மாற்றம் ஆசிரியரின் முயற்சியினால்..."
கட்டுரையாளர்
தலைமை ஆசிரியர்
பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி,
நாகமலை,மதுரை.