

சென்னை: பொறியியல் சேர்க்கை கலந்தாய்வின் 3 சுற்றுகள் முடிவில் 58,307 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில் தற்போது இறுதி சுற்று (4-வது சுற்று) கலந்தாய்வு தொடங்கியிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 446 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள் என அனைத்து வகை கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் 1,48,811 இடங்கள்அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும்.இவற்றை நிரப்புவதற்கான ஒற்றைச்சாளர முறையிலான கலந்தாய்வு ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கியது.
பொதுப்பிரிவு கலந்தாய்வு மொத்தம் 4 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. அதன்படி முதல் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 10-ல் தொடங்கி 24-ம் தேதி நிறைவடைந்தது. இதில் 10,340 மாணவ, மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து 2-வது சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 13-ம் தேதி நடைபெற்றது. இதில் 19,947 இடங்கள் நிரம்பின. இதையடுத்து 3-வது சுற்று கலந்தாய்வு அக்டோபர் 13-ம் தேதி தொடங்கி சனிக்கிழமை முடிவடைந்தது. இதில் பங்கேற்க 54 ஆயிரம் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களில் பொது பிரிவில் 24,727 பேரும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 3,293 பேரும் சேர்க்கை இடங்களை உறுதி செய்தனர். ஒட்டுமொத்தமாக 3 சுற்றுகளும் சேர்த்து 58,307 இடங்கள் நிரம்பி இருக்கின்றன.
இந்நிலையில், எஞ்சியுள்ள இடங்களை நிரப்புவதற்கான இறுதிச் சுற்று கலந்தாய்வு (4-வது சுற்று) சனிக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்க 61,771 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றைக்குள் (அக்.31) தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை விருப்பப் பட்டியலை இறுதி செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு tneaonline.org என்ற இணைய தளத்தை பார்க்கலாம்.