தயங்காமல் கேளுங்கள் - 15: கைப்பழக்கத்தை வலுக்கட்டாயமாக மாற்றினால் விபரீதம்!

தயங்காமல் கேளுங்கள் - 15: கைப்பழக்கத்தை வலுக்கட்டாயமாக மாற்றினால் விபரீதம்!

Published on

பெண்களைக் காட்டிலும் ஆண்களிடம் இடது கைப்பழக்கம் அதிகம் காணப்படுவதாக கடந்த வாரம் முடித்தோம். இத்தகைய இடது கைப்பழக்கம் கருவில் இருக்கும்போதே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது என்பதுடன், பிறந்தவுடனேயே 40 சதவீத குழந்தைகளிலும், இரண்டு வயதுக்குள் அனைவரிலும் அவர்களது கைப்பழக்கம் எது என்பது வெளிப்பட்டுவிடுகிறது.

உண்மையில், இடது கைபழக்கமுள்ளவர்கள் விவேகத் திறன் மிக்கவர்கள். எந்தச் சூழ்நிலையிலும் சட்டென்று திடமான முடிவுகளை எடுக்கும் திறன் படைத்தவர்கள். கலை, இசை, நடிப்பு என்று படைப்பாற்றல் துறையில் சிறந்து விளங்குபவர்கள் என்று பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. விளையாட்டுத் துறையில் குறிப்பாக டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பேட்மின்டன், கிரிக்கெட் போன்ற தனிநபர் விளையாட்டுகளில், இடது கையினர் சிறந்து விளங்குவர் என்பதுடன், நுட்பமான பணிகளிலும் இவர்கள் எப்போதும் முன்னிலையில் இருப்பார்கள் என்பதற்கு உலகெங்கும் பல பிரபலங்கள் எடுத்துக்காட்டாக நிறைந்துள்ளனர்.

மாவீரன் அலெக்ஸாண்டர், ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ, லியனார்டோ டாவின்ஸி, விஞ்ஞானி பெஞ்சமின் ஃபிராங்க்ளின், மேடம் மேரி கியூரி, நடிகர்களில் சார்லி சாப்ளின், மர்லீன் மன்றோ, டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா போன்ற பலரும் இடது கைப்பழக்கம் கொண்டவர்களே. தேசத்தந்தை மகாத்மா காந்தி, அமெரிக்க அதிபர்கள் ரொனால்டு ரீகன், பில் கிளின்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா ஆகியோரும், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சௌரவ் கங்குலி, யுவராஜ் சிங், இந்தித் திரைப்பட நட்சத்திரம் அமிதாப்பச்சன் என இடது கைப்பழக்கம் கொண்ட பிரபலங்களின் பட்டியல் மிக நீளமானது.

ஆனால், இத்தனை இருந்தும் நமது சமூகத்தில் இடது கையால் தருவதையோ பெறுவதையோ தவறு என்றும் அவமரியாதை என்றும் கருதுகின்றனர். இதனால்தான் இடது கைப்பழக்கம் கொண்ட தங்களது குழந்தைகளை யாரும் மனம் வருந்தச் செய்துவிடக் கூடாதே என்ற அச்சத்தில் பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தைகளை வலதுகைக்கு மாறச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

ஆனால், இப்படி குழந்தைப் பருவத்தில் கைப்பழக்கத்தை கட்டாயப்படுத்தி மாற்றினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்கிறது உளவியல் மருத்துவம். அது கோணலான கையெழுத்தில் தொடங்கி,படிப்பில் கவனமின்மை, ஞாபகமறதி, திக்குவாய், தாழ்வு மனப்பான்மை, மன அழுத்தம், உடல் சோர்வு என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கின்றனர் மனவியல் மருத்துவர்கள்.

ஆகவே கைப் பழக்கத்தை மாற்றுவது என்பது வெறும் பேனாவை ஒரு கையிலிருந்து மற்றோரு கைக்கு மாற்றுவதல்ல இன்னும் அதிக சிக்கல்கள் நிறைந்த ஒன்று என்கிற புரிதல் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் அவசியமாகிறது. மேலும், இடது கைப்பழக்கமுள்ளவர்களை வலது கையர்களாக மாற்றுவதைவிட, வலது கைப்பழக்கம் உள்ள நாம் அனைவரும், இடது கையையும் சேர்த்து உபயோகிக்கப் பழக்கப்படுத்துவது மூளைக்கும், நமது பல்வேறு வேலைகளுக்கும் நிச்சயம் பலன்தரும் என்பதுதான் நிதர்சனம்.

ஆகவே வருண், இடது கைப்பழக்கம் என்பது இயற்கையாக, பிறப்பில் வருவது.

இது ஒரு நோயோ, குறைபாடோ அல்ல. நீ எப்போதும்போல இடது கையில் எழுது.

வகுப்பிலும் வாழ்க்கையிலும் வெற்றிகள் உன்னைச் சேர வாழ்த்துகள்!

(ஆலோசனைகள் தொடரும்)

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.

தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in