

புதுடெல்லி: சென்னை ஐ.ஐ.டி.,யும், பனாரஸ் ஹிந்து பல்கலை.யும், காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சியை அறிவித்துள் ளன. இதன்படி, 3,000 சிறப்பு விருந்தினர்கள், காசி மற்றும் அயோத்திக்கு தமிழகத்தில் இருந்து இலவசமாக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தேசிய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.,யும், பனாரஸ் ஹிந்து பல்கலை. இணைந்து, காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளன. தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே உள்ள கல்வி, பொருளாதார, சமூக, கலாசார உறவுகள் குறித்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. நவம்பர் 16- ஆம் தேதி முதல்டிச., 20 வரை, சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. தமிழகத்தில், 12 இடங்களில் இருந்து, கலை, இலக்கியம், ஆன்மீகம், கல்வி உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்களை, காசிக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இருந்து, 12 நாட்களில், ரயில்களில் சிறப்பு பெட்டிகள் அமைக்கப்பட்டு, காசிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். ஒவ்வொரு குழுவினரும் புறப்பட்டு திரும்பி வர, எட்டு நாட்களாகும். இந்த பயணத்தில், காசி, அயோத்தி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். கங்கையில் படகு சவாரியும் உண்டு. பயண செலவு, தங்குமிடம் முழுவதும் இலவசம். விருப்பம் உள்ளவர்கள், https://kashitamil.iitm.ac.in/ என்ற இணையதளத்தில், உடனடியாக தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.