

சென்னை: இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையில் காவலர் மற்றும் தலைமை காவலர் பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.80 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்படும். ஐடிபிபி ஆட்சேர்ப்பு 2022-ன் மூலம் மொத்தம் 293 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தலைமை காவலர் (தொலைத்தொடர்பு) பதவியின் கீழ் 126இடங்கள், காவலர் (தொலைத்தொடர்பு) பதவியின்கீழ் 167 இடங்கள் காலியாக உள்ளன. தலைமை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மட்டுமே. மகளிர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை. காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். தலைமை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தலைமைக் காவல் பணிக்கு ரூ.25,000 முதல் ரூ.81,100 வரையிலும், காவலர் பணிக்கு ரூ.21,700 முதல் ரூ.81,100 வரையிலும் ஊதியம் வழங்கப்படும். காவலர் மற்றும் தலைமை காவலர் பதவிகளுக்கு உரிய காலியிடங்களுக்கு நவம்பர் 1 முதல் 30 வரை விண்ணப்பிக்கலாம். உரிய கல்வித் தகுதி உள்ளவர்கள் recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.