Published : 26 Oct 2022 06:08 AM
Last Updated : 26 Oct 2022 06:08 AM

9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் தற்போது 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் ஊரக திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு தேர்வுத்துறை சார்பில் ஊரக பகுதி மாணவர்களுக்காக ஊரக திறனாய்வுத்தேர்வு (TRUST) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான (2022-2023) ஊரக திறனாய்வுத்தேர்வு டிசம்பர் 10-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

இத்தேர்வுக்கு ஊரக பகுதியில் (ஊராட்சி மற்றும் டவுன்சிப் பகுதி) அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2022-2023) 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் எழுத தகுதியுடையவர் ஆவர். நகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது. மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

இன்று முதல் விண்ணப்பம்: இதற்கான விண்ணப்ப படிவத்தை அக்டோபர் 26 (இன்று) முதல் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in ) பள்ளிதலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம்செய்துகொள்ளலாம். அவ்விண்ணப்பத்தை மாணவர்களுக்கு வழங்கிபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வருமானச்சான்றையும் இணைத்து நவம்பர் 5-ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்வுக்கட்டணமாக ரூ.10. தேர்வுக்கட்டணத்தை தலைமை ஆசிரியர்கள் ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 28 முதல் நவம்பர் 8 வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நவம்பர் 8-ம் தேதிக்கு பிறகு விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய இயலாது. விண்ணப்ப பதிவேற்றம் முடிந்த பிறகு பள்ளியில் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களை முதன்மை கல்வி அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாதம்தோறும் ரூ.1000: ஊரக திறனாய்வுத்தேர்வு ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்களும், 50 மாணவிகளும் தேர்வுசெய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x