

ஆபத்தான நிலையில் இருந்த பச்சிளம் குழந்தையை ஆம்புலன்சில் விரைந்து அழைத்துச் சென்று காப்பாற்றிய அக்கீம் என்ற கோத்தகிரியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாந்தநாடு கிராமத்தைச் சேர்ந்த இளம் தம்பதியருக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. சில மணிநேரம் கழித்து குழந்தைக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டானது. அந்த மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்கான வசதிகள் இல்லாததால் குழந்தையை உடனடியாக ஆம்புலன்ஸில் கோவைக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இடையில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியது. உடனடியாக அருகில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் காவல் துறையினருக்கு ஓட்டுநர் அக்கீம் தகவல் தெரிவித்திருக்கிறார். மேலும் எட்டு ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து குழந்தை உள்ள ஆம்புலன்சுக்கு முன்னும் பின்னும் சைரன் ஒலி எழுப்பி போக்குவரத்தில் சிக்காமல் அணிவகுத்தன. கோத்தகிரியில் இருந்து கோவை 85 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் செல்ல குறைந்தது 2 மணிநேரம் ஆகும். ஆனால் இத்தகைய முன்னெச்சரிக்கை ஏற்பாட்டை துரிதமாக செயல்படுத்தியதால் 68 நிமிடங்களில் கோவை மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து, சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அக்கீம் குழந்தையை காப்பாற்றியிருக்கிறார். இப்படி மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக அறிவாற்றலை பயன்படுத்துவதே தெளிந்த நல்லறிவு எனப்படுகிறது.