

உழைப்பையும், கல்வியையும் இணைக்க வேண்டும் என்ற காந்தியின் கனவுடன், நயீ தலிம் பள்ளி மலர்ந்தது. படைப்பூக்கம் கொண்ட மனதோடு சுதந்திரமான கற்றல் முறை என்னும் தனது கனவை நயீ தலிம் பள்ளியின் மூலம் கைகோர்க்கச் செய்தார் தாகூர். எங்கே அந்த அற்புதமான பள்ளி? மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் அபய் பங், சிறுவயதில் நயீ தலிம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை பயின்றவர். பிறகு அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்துவிட்டு, மகாராஷ்டிராவின் கட்சிரோலி எனும் ஆதிவாசிகள் வாழும் பகுதியில் மருத்துவப் பணியை செய்யத் தொடங்கினார். அபய்பங்கின் மனைவி ராணியும் மருத்துவர்.
அவர்கள் இருவரின் சேவையால், நாட்டிலேயே குழந்தை இறப்பு விகிதம் குறைந்ததொரு பகுதியாக, கட்சிரோலி பகுதி மாறியிருக்கிறது என்பதே அர்ப்பணிப்புள்ள இவர்களின் மருத்துவ பணிக்கலாச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாகும். அமெரிக்கா சென்று படித்தவர் ஏன் பளபளக்கும் மருத்துவக் கட்டிடத்தில் பணிசெய்ய செல்லாமல், ஆதிவாசிப் பகுதிக்கு சென்றார்? நயீ தலிம் பள்ளி சமூகக் கடமையை, அர்ப்பணிப்பு உணர்வை தனக்குள் விதைத்தது என்கிறார். தன் மகன் ஆனந்தை, தான் படித்த நயீ தலிம் பள்ளியில் கல்வி கற்க சேர்க்கலாம் என்று தேடுகிறபோது, நயீ தலிம் பள்ளியைக் காணவில்லை. புத்தகத் தாள்களில் இருந்து மட்டும் கற்காமல், எவ்வாறு செயல்பாடுகளின் வழியாகக் கற்றோம், எதையும்தனியாகக் கற்காமல் சேர்ந்து எவ்வாறுகற்றோம் என்பதையெல்லாம் அசைபோட்டபடி, தான் படித்த பள்ளியை, பாடமுறையை நினைவுகூர்கிறார்.
விலங்குகளை அறிதல்: விலங்குகளைப் பற்றி அறிந்து கொள்ள புத்தகத்தில் படங்களைக் கொண்ட பாடம்இல்லை நயீ தலிம் பள்ளியில். பள்ளி தோட்டத்தின் மரக்கிளைகளில் குழந்தைகளை தூக்கி அமரவைத்துவிட்டு, தன்னுடைய கோர்வையான சொற்களால் விலங்குகள் பற்றிய செய்திகளை கதைகளாக்கிக் கூறுவார் ஆசிரியர்.
கலைத் திருவிழா: கட்டுரைப்போட்டி, கதைப்போட்டி, பாட்டுப்போட்டி போன்றவை போட்டிகளாக நடத்தப்படாமல், அவை திருவிழாக்களாகக் கொண்டாடப்படும். ஒரு சில குழந்தைகள் மட்டுமல்ல. ஒவ்வொரு குழந்தையும் இத்திருவிழாவில் பங்கேற்பர். இங்கு எங்களுடைய பாடங்களை ‘மொழி' ‘தத்துவம்' ‘இசை' என்று தலைப்பிட்டுக் கொள்ளாமல் விளையாட்டாகக் கற்றோம் என்கிறார் அபய்பங்.
தாவரவியல் பாடம்: இக்காலத்தில் குழந்தைகள் தாவரவியல் பாடங்களை கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்கிறார்கள். தேர்வு முடிந்தவுடன் மறந்தும் விடுகிறார்கள். நயீ தலிம் பள்ளியில், ஆசிரியர்கள் வயல்வெளிக்கும் தோட்டங்களுக்கும் அழைத்துச்சென்று இயற்கைக்கு மிகநெருக்கமாகக் குழந்தைகளை கொண்டுவந்தனர். தாவரங்களைத் தொட்டு, உணரச் செய்து, நுணுக்கமாகக் கவனிக்குமாறு உற்சாகப்படுத்தினர்.
வாழ்க்கைக் கணிதம்: அபய்பங், அனைத்து மாணவர்களுக்கு மான உணவை தங்களுக்கு தாங்களே சமைத்துக்கொள்ள வேண்டும், நயீ தலிம் பள்ளியில் வாரத்திற்கு ஒரு குழுவினர் பொறுப்பேற்க வேண்டும். கொடுக்கப்படும் பட்ஜெட்டில் சமைத்து முடிக்கவும், அது ஆரோக்கியமான சத்தான உணவாக இருக்கும் அளவில் பொருளாதார கணக்கீடு கொண்ட திட்டமிடலும், பட்டியலும் தயாரிக்கச் சொல்லித்தந்தது என்கிறார்.
விவசாயத்தில் பரிசோதனைகள்: காந்தியின் ‘உணவுக்கான வேலை' திட்டமிடலில் ஒவ்வொரு குழந்தைக்கும் காய்கறிகள் வளர்க்க ஒரு துண்டு நிலம்ஒதுக்கப்படும். களையெடுத்து, நீர்பாய்ச்சி,புதிய விவசாய முறைகளை தேடிப் படித்து, செயல்படுத்தி பயிர்களை வளர்த்தெடுக்க வேண்டும். ஒரு மாட்டுக் கொட்டகையின் தேவைக்கேற்ற தொட்டியைக் கட்ட, எத்தனை செங்கல் தேவைப்படும் என்பதை நாங்களாகவே அனுபவக் கல்வியாகவே கற்றோம்.
நயீ தலிம் பள்ளியின் தோல்வி: யதார்த்த வாழ்க்கையோடு தொடர்பு கொண்டிருந்த ஒவ்வொரு அறிவியல் துறையிலும், மற்ற குழந்தைகளை விட காந்தியின் புதிய கல்வி முறையின் கீழ்நயீதலிம் பள்ளியில் படித்த குழந்தைகள் மேம்பட்டிருந்தனர். நாங்கள் புவியியல் பாடத்தை முறைசார்ந்து கற்கவில்லை. சேவாக்கிராமத்திற்கு நாட்டின் பல பகுதி களிலிருந்தும் வரும் பார்வையாளர்கள் கூறும் கதைகளைக் கேட்பதன் மூலம் நாடுகளைப் பற்றி அறிந்தோம். ஆசிரியர்கள் செய்தித்தாள் வாசிப்புமூலம் நாடுகளைப் பற்றிக் கூறுவார்கள்.நூலக வாசிப்பில் பயணக் கட்டுரைகளைவாசிக்கச்சொல்லி அறிமுகப்படுத்துவார் கள். ஆனால் நயீ தலிம் பள்ளி இந்தியச் சுதந்திரத்திற்கு பிறகு தொடர்ந்து செயல்பட, அரசு ஆதரவு கிடைக்கவில்லை.
நயீ தலிம் பள்ளி மாணவர்களின் உழைப்பை அதிகமாக வலியுறுத்துகிறது. குழந்தைகள் கல்வியைப் பெறுவதில் இடைஞ்சலாக இருக்கிறது என்று பெற்றோர்களால் குற்றம் சாட்டப்பட்டது. சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருந்த சுயநலமும், பொருள் சேர்ப்பதில் உருவான போட்டி மனப்பான்மையும் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு சாவு மணி அடித்தன. எனக்கு கிடைத்த பள்ளி, என் மகனுக்கும் கிடைக்க வேண்டுமன விரும்புகிறேன். எங்கே அந்த அற்புதமான பள்ளி? என்று ஆதங்கப்படுகிறார் டாக்டர் அபய்பங். மராட்டி மொழியில் எழுதப்பட்ட இந்த நூல், தமிழில் ச.ராமசுந்தரம் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாசல் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ளது.
கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர்,
ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம்.
தொடர்பு: udhayalakshmir@gmail.com