

“அதோ பஞ்சப்பட்டி” ஊர் பெயர் பலகையைப் பார்த்ததும் மாணவர்கள் மகிழ்ச்சியில் கத்தினார்கள். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சிக்குச் செல்வதால் இந்த உற்சாகம். கண்காட்சியில், பிளஸ் 1 வகுப்பு மாணவன் பூவரசன் கண்டுபிடித்த அலைபேசி புளூடூத் மூலம் ரோபோவைக் கட்டுப்படுத்தி இயக்கும் படைப்பு மாணவர்களை மிகவும் கவர்ந்தது.
தெளிவு பெற பூவரசனிடம் நிறைய கேள்விகள் கேட்டார்கள். பெங்களூருவில் நடந்த சர்வதேச அறிவியல் கண்காட்சியில் இந்த ரோபோ 3-ம் பரிசு பெற்றதையும், இதனால் பூவரசனுக்கு இளம் ஐன்ஸ்டீன் விருது கிடைத்ததையும் அறிந்தபோது, அவர்களின் கண்கள் விரிந்தன. இதை கவனித்த ஆசிரியர்சுந்தர், உணவு இடைவேளையின்போது மாணவர்களுக்கு ஒரு கதை சொன்னார்.
கண்டதையும் உடைப்பவன்: அமெரிக்காவின் காலராடொ மாகாணத்தில் 1996-ல் பிறந்தவர் ஈஸ்டன் லாசெபெல். கையில் கிடைக்கும் பொருட்களை தனிதனியாகப் பிரித்து,என்ன இருக்கிறது, எப்படி செயல் படுகிறது என்று அறியும் ஆர்வம்மிகுந்தவராக வளர்ந்தார். பெற்றோர் முழு சுதந்திரம் கொடுத்தார்கள். பள்ளியில் சேர்ந்த பிறகும் தேடல்குறையவில்லை. யூடியூபில் நிறையகாணொலிகள் பார்த்தார். இணையத்தில் தேடி வாசித்தார். உலகின் பல பகுதிகளில் வாழ்கிறவர்களுடன் ஸ்கைப் வழியாகப் பேசி தெளிவு பெற்றார். 14 வயதில், விளையாட்டாக ரோபோ கை செய்தார். வலது கையில்ஓர் உறை அணிந்து, விரல்களை மடக்கும்போது, எதிரில் உள்ள ரோபோ அதன் விரல்களை மடக்கியது. அடுத்த சில மாதங்கள், மீன் தூண்டில் நரம்பு, நெளிவுடைய நெகிழி குழாய் (corrugated), குழந்தைகள் விளையாடும் கியூப்ஸ், விமான மோட்டார் ஆகியவற்றைப் பயன்படுத்தி ரோபோ கையை மேம்படுத்தினார்.
கை இல்லாதவர் நினைப்பதை ரோபோ கை செய்ய வேண்டும். எப்படி உருவாக்கலாம்? என யோசித்தார். ஒருநாள், நண்பர்கள் சிலர்மைண்ட்ஃபிளக்ஸ் (Mindflex) விளையாடுவதைப் பார்த்தார். மைண்ட்ஃபிளக்ஸ் விளையாடுகிறவர் தன்கவனத்தை ஒருமுகப்படுத்தி, பந்துமேலெழும்ப வேண்டும் என நினைத்தால், அது எழும்பும். இந்த விளையாட்டுக் கருவியை ஈஸ்டன் வாங்கினார். வயர்கள் பிணைக்கப்பட்டுள்ளதை ஆராய்ந்தார். அதைப் பின்பற்றி ரோபோவை மேலும் மேம்படுத்தினார். அப்போது அவருக்கு வயது, 16.
வழிகாட்டிய மாணவி: காலராடொவில், மாகாண அறிவியல் கண்காட்சியில் தேர்வான அவரதுகண்டுபிடிப்பு சர்வதேச அறிவியல் கண்காட்சிக்கு அனுப்பப்பட்டு 2-ம் பரிசு வென்றது. கண்காட்சிக்கு வந்திருந்த 7 வயது சிறுமி, ஈஸ்டன் தயாரித்த ரோபோ கையை வெகு நேரம் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே நின்றார். அவருக்கு வலது கை இல்லை. மாணவியிடமும் அவரது பெற்றோரிடமும் ஈஸ்டன் பேசினார். செயற்கை கை வைப்பதற்காக 80,000 அமெரிக்க டாலர்கள் செலவானதாக அவர்கள் சொன்னதைக் கேட்டுத் திகைத்தார். அந்நேரம், ரோபோ கையை நவீனப்படுத்தி விலை குறைவாக கொடுக்க முடிவெடுத்தார். பள்ளிப் படிப்பை முடிக்காமலேயே, 18 வயதில், Unlimited Tomorrow நிறுவனத்தை தொடங்கினார்.
இணைந்து உலகை மாற்றுவோம்: முப்பரிமாண முறையைப் பின்பற்றி இடது கை இல்லையென்றால், வலது கையை ஸ்கேன் செய்து அதே நிறத்தில், மென்மையாக உடலின் ஒரு பகுதிபோலவே இடது கையை உருவாக்கினார். ரோபோ கையை, உடலில் எஞ்சியுள்ள மூட்டுடன் இணைத்ததும், அவர் என்ன நினைக்கிறாரோ அதை அந்தக் கை செய்தது.
“யாரும் தனி ஒருவராக உலகைமாற்றவில்லை. பலரும் இணைந்துதான் மாற்றுகிறார்கள். நான் இதை உருவாக்கியுள்ளேன். மற்றவர்கள் இதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லலாம். எனவே, முப்பரிமாண ரோபோ கை செய்வதற்கான வடிவமைப்பு, மென்பொருள் அனைத்தையும் பொதுவில் வைக்கிறேன். விரும்புகிறவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று 19 வயதில் தன் கண்டுபிடிப்பை உலகுக்கு வழங்கிய ஈஸ்டன், மென்மேலும் சாதனைகள் பல புரிந்துவருகிறார்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்,மொழி பெயர்ப்பாளர்.
தொடர்பு:sumajeyaseelan@gmail.com