

தொழில்நுட்ப கல்வியில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பேசியிருக்கிறார். அப்போது அவர் அக்கல்லூரியின் முன்னாள் மாணவியும் புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனையுமான கல்பனா சாவ்லாவை போன்று மேலும் பல பெண்கள் தொழில்நுட்பத் துறையில் ஜொலிக்க வேண்டும் என்றார். மறுபுறம் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அனைத்தும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் நோபல் பரிசு வழங்கப்படுவதில் பாலின சமத்துவம் கடைப்பிடிக்கப்படுகிறதா என்றகேள்வி சர்ச்சையாகியுள்ளது.
நோபல் பரிசுகள் வழங்கப்படத் தொடங்கிய 1901-ல் இருந்து தற்போதுவரை 954 தனி நபர்களும், 27 அமைப்புகளும் விருதினை வென்றிருக்கிறார்கள். அவர்களில் 60 பேர் மட்டுமே பெண்கள். அதிலும் பெரும்பாலானவை அமைதிக்கான செயல்பாட்டிற்கு அல்லது இலக்கிய பங்களிப்புக்காக வழங்கப்பட்டவை. அமைதிக்கும் இலக்கியத்துக்கும் பெண்களுக்கு விருது கிடைப்பது அவர்கள் சமூக அக்கறைக்கான சான்றே. இருப்பினும் அறிவு தளத்தில் அவர்களது பங்களிப்பு ஒன்று குறைத்து மதிப்பிடப்படுகிறது அல்லது குறைவாகவே உள்ளது என்பதை இது காட்டுகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டதும் ஆனி எர்னாக்ஸ் என்கிற ஒரே ஒரு பெண்ணுக்குத்தான். அதுவும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு. ஆக மொத்தம் நமது குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டியதுபோல தொழில்நுட்பம் மட்டுமல்லாது மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றை உள்ளடக்கிய அறிவியல் மற்றும் பொறியியல், கணிதவியல் ஆகிய துறைகளிலும் மாணவிகளின் பங்கேற்பு கணிசமாக அதிகரிக்க வேண்டும்.