

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. மாநிலம் முழுவதும் மழை வெள்ளப் பாதிப்பை தடுப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், முதல்வர் பேசுகையில், ‘‘மழைவெள்ளத் தடுப்பு தொடர்பாக தொடங்கப்பட்ட பணிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவேமுடிக்க அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். குறிப்பாக பள்ளிக் கட்டிடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார். இதற்கு முதலில் மழைநீர் தேங்கும் பள்ளிகளை அதிகாரிகள் அடையாளம் காண வேண்டும். அத்துடன், அங்கு மழைநீர் வெளியேறும் பகுதி, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட கட்டமைப்புகள் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அண்மையில் பெய்த கனமழைக்கு மழைநீர் பெருமளவு தேங்கியதால் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், அகரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதை முன் எச்சரிக்கையாகக் கொண்டு மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகள் முன்வர வேண்டும். அரசு பள்ளிகளில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் தொடங்கி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர் வரை அனைவரும் முக்கியப் பங்காற்ற வேண்டியது அவசர அவசியம்.