

சிறுவர், சிறுமிகள் தங்களது ஓய்வு நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கான களத்தை உருவாக்குவது, பின்தங்கிய சூழலில் வாழும் சிறுவர்கள் சமூக விரோத போக்கில் செல்லாமல் மடைமாற்றுவது, சமூக விரோதிகளிடம் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது ஆகியவற்றுக்கு காவல் சிறார் மன்றம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது.
இதன் பொருட்டு பல்வேறு விளையட்டு நிகழ்வுகள், யோகா பயிற்சி, மெட்ரோ ரயிலில் சவாரி, கடலோர காவல்படை கப்பலில் பயணம், போலீஸ் அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்லுதல் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டன. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசுகளும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக, குற்றங்கள் தடுக்கப்பட கடும் தண்டனைகள் விதிக்கப்படுவது மட்டுமே தீர்வாக நம்பப்படுகிறது. ஆனால், தவறுகள் நிகழ்வதற்கான சூழலை மாற்றினால் மட்டுமே குற்றம் நிகழாமல் தடுக்க முடியும் என்பதை உணர்ந்து தமிழக அரசு இத்தகைய திட்டத்தை செயல்படுத்தி வருவது நிச்சயமாக எதிர்காலத்தில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கும்.
அதிலும் வளரிளம் பருவ குழந்தைகளின் நலன்களை மேம்படுத்துவதற்கும், சட்டத்திற்கு முரணாக செல்லும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும், சீர்திருத்துவதற்கும் இந்த திட்டம் நிச்சயம் கைகொடுக்கும்.
சென்னை பெருநகர காவல்துறைக்குகீழ் மொத்தம் 5575 சிறுவர்களை கொண்ட 112 காவல் சிறார் மன்றங்கள் செயல்பட்டுவருகின்றன. அவற்றில் 107 சாரண மாஸ்டர்களும் 104 பராமரிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகத்துக்கு இத்தகைய திட்டங்கள் மூலமாகத்தான் உண்மையில் உயிரூட்ட முடியும்.