சிஎம்டிஏ, டிடிசிபி நிதியுதவியுடன் இந்த ஆண்டு தொடங்க தமிழக அரசு அனுமதி: அண்ணா பல்கலை.யில் பி.பிளான் படிப்பு அறிமுகம்

சிஎம்டிஏ, டிடிசிபி நிதியுதவியுடன் இந்த ஆண்டு தொடங்க தமிழக அரசு அனுமதி: அண்ணா பல்கலை.யில் பி.பிளான் படிப்பு அறிமுகம்
Updated on
2 min read

சென்னை: சிஎம்டிஏ, டிடிசிபி நிதியுதவியுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘பி.பிளான்’ பட்டப்படிப்பை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான திட்ட அமைப்பாளர்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நகர்ப்புற திட்டமிடல்திறன் தொடர்பாக நிதி ஆயோக் அளித்த பரிந்துரையில், திறன்மிக்க திட்ட அமைப்பாளர்கள் (பிளானர்கள்) அதிகளவில் தேவைப்படுவதை சுட்டிக்காட்டியது.

அதில், வரும் 2032-ம்ஆண்டில் 3 லட்சம் நகர மற்றும் ஊரமைப்பு திட்ட அமைப்பாளர்கள் நாடு முழுவதும் தேவைப்படுவதாகவும், குறிப்பாக ஆண்டுக்கு சராசரியாக 6 ஆயிரம் இளநிலை திட்டமிடல் பட்டதாரிகள் 2 ஆயிரம் முதுநிலை திட்டமிடல் பட்டதாரிகள் என 8 ஆயிரம் பேர் தேவைப்படுவதாகவும் தெரிவித்தது.

மேலும், புதிதாக பெருநகரங்களில் 14 புதிய திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை கல்லூரிகள் தொடங்கி ஆண்டுக்கு இளநிலை திட்டமிடலில் (பி.பிளான்.)

75 பேரும், முதுநிலையில் (பி.பிளான்) 60 பேரும் சேர்க்கலாம் என்றும், மற்ற இடங்களை பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் இதர மாநில அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள், இதர கல்வி நிறுவனங்களில் இளநிலை திட்டமிடல் படிப்புக்கு வழங்கலாம் என்றும் யோசனை தெரிவித்தது.

இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற திட்டமிடல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழகத்தில் 3 கல்விநிறுவனங்கள் முதுநிலை திட்டமிடல்படிப்பை வழங்கி வருவதாகவும், ஆனால், இளநிலை திட்டமிடல் படிப்புஎந்த கல்வி நிறுவனத்திலும் வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழகத்தில் தகுதி வாய்ந்த நகர திட்ட அமைப்பாளர்கள் பற்றாக்குறை இருப்பதால், பி.பிளான்படிப்பை, தமிழகத்தில் சில கல்விநிறுவனங்களில் தொடங்க நடவடிக்கை எடுக்க உயர்கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் அண்ணாபல்கலைக்கழகத்தில் பி.பிளான்படிப்பை தொடங்க முடிவெடுக்கப்பட்டு, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கையில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்.25-ம்தேதி நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில், தற்போதுள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) விதிகளின்படி, அண்ணா பல்கலைக்கழகம் பி.பிளான் படிப்பைதொடங்க உள்ளதாக உயர்கல்வித்துறையின் முதன்மைச் செயலர் டி.கார்த்திகேயன் தெரிவித்தார்.

‘‘சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளியில், இளநிலை திட்டமிடல் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சிஎம்டிஏ) மற்றும் நகர ஊரமைப்பு இயக்ககம் (டிடிசிபி) ரூ.10 கோடி வழங்கும்’’ என சட்டப் பேரவையில் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, அறிவித்தார்.

இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்துடன் சிஎம்டிஏ, டிடிசிபி இணைந்து பி.பிளான் படிப்பை தொடங்குவதென முடிவு எட்டப்பட்டது.

சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி 5 ஆண்டுகள் படிப்பான பி.பிளான் படிப்புக்கு, முதல் கட்ட அடிப்படை நிதியாக ரூ.10 கோடியும், அடுத்தடுத்த 4 ஆண்டுகளுக்கு ரூ.8.54 கோடியும் என ரூ.18.54 கோடி தேவை என்பதால், இந்த நிதியை சிஎம்டிஏவும், டிடிசிபியும் 80:20 என்ற விகிதத்தில் நிதி அளிக்க உத்தரவிட்டுள்ளது.

முதல்கட்ட நிதியான ரூ.10 கோடியை உடனே வழங்கவும், எஞ்சிய நிதியை 4 ஆண்டுகளாக பிரித்து வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், பி.பிளான் படிப்பை நடைமுறைப்படுத்த, அண்ணா பல்கலைக்கழக கட்டிடவியல் மற்றும் திட்டமிடல் கல்லூரியின் ஆய்வு அமைப்பான மனித குடியமர்வுமையத்தின் செயற்குழுவில் துணைத்தலைவராக சிஎம்டிஏ உறுப்பினர் செயலராகவும்,பாடத்திட்டத்துக்கான சார்பு குழுவில்உறுப்பினராகவும் செயல்பட ஒப்புதல்அளித்துள்ளது.

பி.பிளான் படிப்புக்கான பேராசிரியர்களை தேர்வு செய்யும் குழுவில் சிஎம்டிஏ உறுப்பினர்செயலர், டிடிசிபி இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இரு அமைப்புகளும் சேர்ந்து பி.பிளான் படிப்புக்கான ஒரு ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் இருக்கையை உருவாக்கவும், ஆண்டுதோறும் இரு அமைப்புகளில் இருந்தும், தலா 2 அதிகாரிகளை டான்செட் தேர்வு இன்றி சேர அனுமதிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in