

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை பட்டியலிட்டு 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அனுப்பும்படி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மக்களின் தேவைகளை உணர்ந்து அதை பூர்த்தி செய்யவே மக்களின் பிரதிநிதிகளாக முதல்வர் உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட கல்வி நிலையங்களை மேம்படுத்துவதற்கான கோர்க்கையை இந்த பட்டியலில் நமது எம்எல்ஏக்கள் கட்டாயம் முன்வைக்க வேண்டும். குறிப்பாக அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதற்கான முனைப்புடன் எம்எல்ஏக்கள் ஈடுபட வேண்டும்.
ஒருபுறம் மாணவர் சேர்க்கை அதிகரித்தாலும் நூற்றுக்கணக்கான அரசு பள்ளிகள் மாணவர்கள் இன்றி மூடப்படும் அபாயத்தில் உள்ளன. அதற்கு மக்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை.
தரமான கல்வியையும் பாதுகாப்பான கல்விச்சூழலையும் அரசு பள்ளிகள் உறுதி செய்தால் தனியார் பள்ளிகளை நோக்கி எதற்காக மக்கள் ஓடப்போகிறார்கள்? இதற்கு தீர்வு காண்கிறேன் என்கிற பெயரில் சிறப்பாக செயல்படும் 10 அரசு பள்ளிகளுக்கு ரூ.10 கோடி ஒதுக்குவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கடந்த மாதம் அறிவித்தார்.
அதனை ஒட்டி சில பள்ளிகளுக்கு நிதியும் அறிவிக்கப்பட்டது. அந்த பட்டியலில் இடம்பிடித்த பெரும்பாலான பள்ளிகள் ஏற்கெனவே சிறந்த உள்கட்டமைப்பு வசதி கொண்டவையாக இருந்தன.
ஒருபுறம் பழுதான வகுப்பறைகள், பாழடைந்த வளாகம், மோசமான கழிப்பறை, குடிநீர் வசதியின்மையால் தத்தளிக்கும் பல அரசு பள்ளிகள் இருக்க ஏற்கெனவே சிறப்பாக செயல்படும் பள்ளிகளில் கவனத்தை குவிப்பதை விடுத்து தத்தளிக்கும் பள்ளிகளை மீட்டெடுப்பதற்கான அரிய வாய்ப்பாக முதல்வரின் இந்த அறிவிப்பை எம்எல்ஏக்கள் தங்களது கையில் ஏந்த வேண்டும்.