புதுறெக்கை - சிறார் கதைகள்

புதுறெக்கை - சிறார் கதைகள்
Updated on
1 min read

எழுதியவர் : சக . முத்துக் கண்ணன்

வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம்,

பக்கம் : 48 விலை : 40

குழந்தைகளுக்கு ...

புது றெக்கை , பெயரைப் படிக்கும் போதே நமக்கு றெக்கை முளைத்து விடுகிறது. அழகான அட்டைப்படம், ஃபேன்சி பூதம் குழந்தையை இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டு பறப்பது போல் காட்சி. பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. புது றெக்கை நம்மிடம் புது மகிழ்ச்சியைத் தூண்டக்கூடிய ஒரு சிறுகதை புத்தகமாக அமைகிறது. புதுறெக்கைக்குள் பயணம் செய்தால் ஏழு கதைகளை சுற்றிக் காண்பிக்கிறது. என்னென்னவென்று சுற்றிப் பார்க்கலாமா?

உண்ணிப்பழம், கிளிகள். ஆலமரம். புதுறெக்கை, ஞாயிற்றுக்கிழமை, பிறந்தநாள், இனிக்கும் Q. இந்த ஏழு கதைகளையும் படிக்கும் போதும் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.

உண்ணிப் பழம் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரோட இருக்கு. ஒரு சில ஊர்ல லிஃப்டிக் பழம்னு சொல்றாங்களாம். சில ஊர்களில் இங்க் பழம்னு சொல்லுவாங்க. இப்படி ஒவ்வொரு ஊருக்கும் வேற வேற பேர் இருக்கும். இப் பழத்துக்கு அறிவியல் பெயரையும் ஆசிரியர் முத்துக்கண்ணன் குறிப்பிட்டு இருக்கிறார் லாண்டனா கேமரா என்று.

அதே மாதிரி கிளி கதையில், கிளிகள் கூடவே பயணிக்கும் வெண்பா, பக்கத்து வீட்டு பாபு எல்லாம் வர்றாங்க. படிக்கப் படிக்க ஆர்வமாக இருக்குது.

அடுத்து ஆலமரத்தில் வசிக்கும் ஊர்ப் பறவைகள் போடும் சத்தம், இருட்டில் பூச்சி சத்தம் என எல்லாத்தையும் வசந்தி கவனிக்கிறாள். சந்தேகத்தையெல்லாம் ரஃப் நோட்டில் எழுதி வைத்து தாத்தாக்கிட்ட கேட்க காத்திருக்கிறாள்.

அப்புறம் யாழினி பாப்பாவும் பூதமும் பறக்கும் கதை ரொம்ப ஜாலியா இருக்கு. ஞாயிற்றுக்கிழமை கதையில பென்சில் பேசுது தெரியுமா? பிறந்த நாள் கதையில் தாத்தாவுக்கும் அம்மாச்சிக்கும் ஓட்டப் பந்தயம், ஒரே சர்ப்ரைஸ் தெரியுமா? கடைசியா இனிக்கும் Q கதையில அபிக்கு மருதாணி வச்சு Q சொல்லித் தருகிறார்கள் ஈஸ்வரி அக்கா, பக்கத்துக்குப் பக்கம் படம் வரைஞ்சு இருக்கு, அதுக்கு நீங்க கலர் கூட அடிக்கலாம்.

இத்தனை கதையையும் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வகையில் எழுதியிருக்கிறார் ஆசிரியர் முத்துக்கண்ணன். நீங்க உடனே புத்தகத்தை வாங்கிப் படிங்க. எனக்கு மாதிரியே உங்களுக்கும் சுவாராஸ்யம் இருக்கும்.

சு .உமாமகேஸ்வரி

பள்ளி ஆசிரியர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in