

சென்னை: அரசு பள்ளிகளில் 4, 5-ம் வகுப்புகளுக்கான கற்பித்தல் முறையில் மாற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத்திறனுடன் பிழையின்றி எழுத, படிப்பதை உறுதி செய்யும் விதமாக ‘எண்ணும், எழுத்தும்’ திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தி உள்ளது.
இதற்காக நிபுணர் குழு வழிகாட்டுதலின்படி அரும்பு, மொட்டு,மலர் ஆகிய பயிற்சி நூல்கள் மற்றும் சிறப்பு கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் குழந்தைகளுக்கு தற்போது எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
விளையாட்டு வழி மற்றும் செயல்வடிவிலான கற்பித்தல் முறையில் பயிற்றுவிப்பதால் மாணவர்கள் எளிதில் பாடங்களை உள்வாங்கி கொள்கின்றனர்.
இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்தபோதும், திட்ட செயல்பாடுகளில் சில சிரமங்கள் இருப்பதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது. அதாவது, மெல்ல கற்கும் மாணவர்களுக்குதான் இந்த பாடத்திட்டம் சிறந்ததாக உள்ளது. நன்றாக பயிலக்கூடிய மாணவர்கள் தேக்கநிலை அடையும் அபாயம் உள்ளது. மேலும், எண்ணும் எழுத்தும் திட்ட பாடங்களை படித்து 4-ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு ஏற்ப பாடத்திட்டம் மாற்றிமையக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து 4, 5-ம் வகுப்புக்கான பாடத்திட்டம் மற்றும் கற்றல்,கற்பித்தல் முறைகளில் மாற்றங்கள் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "எண்ணும், எழுத்தும் திட்டம், பயிற்சி மாணவர்கள் கற்றலில் நல்ல முன்னேற்றத்தை வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தின்படி 3-ம் வகுப்பு வரை பயிற்சி பெறும் குழந்தைகள் 4-ம் வகுப்புக்கு செல்லும்போது பழையகற்றல் முறையை பின்பற்றினால் சரியாக இருக்காது.
குழந்தைகளின் திறனுக்கேற்ப கற்பித்தல் செயல்பாடுகள் இருந்தால்தான் பாடங்களை புரிந்துகொள்ள முடியும். இதற்காக 4, 5-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம், கற்பித்தல் நடைமுறையை மாற்றி அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம். இதற்காக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட உள்ளது.
அவற்றை எல்லாம் ஆராய்ந்து புதிய வகுப்பறை செயல்பாடுகள் அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்தனர்.