

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2022-23-ம்ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இந்த நிதியாண்டின் பட்ஜெட் மதிப்பீடு ரூ.10,696.61 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சொந்த வருவாய் ரூ.6,557.23 கோடி. மத்திய அரசின் நிதியுதவி ரூ.1,729.77 கோடி. நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.1,889.61 கோடியை கடன் மூலம் திரட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இப்பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை.
முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
பள்ளிக் கல்வித் துறையில் உள்ள விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் தனித்துறையாக்கப்படும். இதற்காக ரூ.3 கோடி ஒதுக்கப்படும். பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த அனைத்து அரசு பள்ளிகளின் வகுப்பறைகளும் ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றப்படும். தற்போது நடைமுறையில் உள்ள இலவச பாட புத்தகம், சீருடை, சிற்றுண்டி, மதிய உணவு, மாணவர் பஸ் பாஸ், கல்வி ஊக்கத்தொகை நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
தேசிய சட்ட பல்கலைக்கழகம்
நடப்பு நிதியாண்டில் பள்ளிக் கல்விக்கு ரூ. 802.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் அறிவாற்றலை பெருக்க தரமான கல்வியை வழங்க கல்வித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. புதுச்சேரியில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் நிறுவப்படும். இதற்கு தேவையான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டுள்ளார்.
உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, திறன்மிக்க மனித வளத்தை உருவாக்கி அதன் மூலம் தொழில் உற்பத்தியை பெருக்கி வாழ்க்கை தரத்தை உயர்த்தும். புதுச்சேரி அரசின் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தற்போது செயல்பாட்டில் உள்ள நிதியுதவி அளிக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து தொகுப்பு கல்லூரிகளாக மாற்ற உள்ளோம். அதன்மூலம் பல்துறை கல்வி நிறுவனங்கள் நிறுவப்படும். தேவைப்படும் நேரத்தில் மாணவர்கள் படிப்பை நிறுத்தினால் அவர்களுக்கு பொருத்தமான சான்றிதழ் தரப்படும்.
புதிய மருத்துவக் கல்லூரி
டெல்லியிலுள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கழக ஒப்புதல் பெற்று புதுச்சேரி லாஸ்பேட் அரசு மகளிர் தொழில்நுட்பக்கல்லூரி, மகளிர் பொறியியல் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு கட்டடக்கலை, கணினி பொறியியல், மின் மற்றும் மின்னணுவியல், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு ஆகிய நான்கு பாடப்பிரிவுகளில் 60 இடங்கள் வீதம் 240 மாணவிகள் பயன்பெறுவர்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் ஒப்புதலுடன் 60 மாணவிகள் பி.காம் பட்டப்படிப்பு படிக்க இங்கு புதிய வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் உயர் மற்றும் தொழில்நுட்பக்கல்விக்காக ரூ. 300.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி காரைக்காலில் ஒரு புதிய மருத்துவக்கல்லூரி கொண்டு வர உத்தேசித்துள்ளோம்.
தகுதிவாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப செயலி பயிற்சி அளிக்கப்படும்.
கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் வேளாண் அறிவியல் மையத்தை வேளாண் சுற்றுலா தலமாக மேம்படுத்த உள்ளோம். இங்கு கிராமப்புற வாழ்வாதாரம், விவசாயம், பட்டுவளர்ப்பு ஆகியவை சுற்றுலா பயணிகளுக்கு காட்சிப்படுத்தும் வகையில் மாதிரி கிராமம் அமைக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.