Published : 16 Aug 2022 06:30 AM
Last Updated : 16 Aug 2022 06:30 AM

விடுதலை போரில் திருப்புமுனை ஏற்படுத்திய தமிழகம்

தமிழகம் விடுதலை போரில் திருப்புமுனை ஏற்படுத்திய தமிழகத்தில் 1801-ல் கர்நாடக உடன் படிக்கையின்படி பாளையக்காரர் முறை முடிவுக்கு வந்தது. ஆனால் அடுத்த 5 ஆண்டில் தமிழகத்தில் மீண்டும் எழுச்சி ஏற்பட்டது. பாளையக்காரர்களிடம் பணியாற்றிய போர்க்குணம் கொண்ட பல வீரர்கள் ஆங்கிலேயப் படையில் இருந்தனர்.

வேலூர் கோட்டையில் வைக்கப்பட்டிருந்த திப்புசுல்தானின் மூத்த மகன் பட்டே ஹைதர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சி செய்ய காத்திருந்தனர். அரியணை இழந்த அரசர்கள், குறுநில மன்னர்கள் ஆகியோரின் சந்ததியினர் ஆங்கிலேயரை பழிவாங்க தொடர்ந்து முயற்சித்து வந்தனர்.

முதல் புரட்சி

இந்நிலையில், 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி ராணுவப் பயிற்சிக்காக வீரர்கள் வேலூர் கோட்டைக்குள் தங்கவைக்கப்பட்டனர். ஆங்கிலேய படையில் இருந்த இந்திய சிப்பாய்கள் அதனை நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அதிகாலை 2 மணிக்கு திடீரென கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கோட்டையில் இருந்த துணைப்படை சிப்பாய்கள் ஆங்கிலேய படை வீரர்களை நோக்கி சரமாரியாக அதிகாலை 5 மணி வரை சுட்டுத் தள்ளினர்.

இதில் தளபதி கர்னல் பென்கோர்ட், மேஜர் ஆம்ஸ்ட்ராங்க் உள்பட 199 பேர் கொல்லப்பட்டனர். மூன்றே மணி நேரத்தில் புரட்சியாளர்கள் கோட்டையைக் கைப்பற்றினர். கோட்டையில் பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டு திப்புசுல்தானின் கொடியேற்றப்பட்டது.

திருப்புமுனை ஏற்படுத்திய வேதாரண்யம்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்று 90 ஆண்டுகள் ஆகிறது. ஆங்கிலேய அரசு உப்புக்கு வரிவிதித்ததைக் கண்டித்து காந்தியடிகள் தண்டியில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தினார். அதன் எதிரொலியாக தமிழகத்தில் வேதாரண்யத்தில் இப்போராட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜாஜி தலைமையில் திருச்சியில் இருந்து 1930-ம் ஆண்டு ஏப்.13-ல் பாத யாத்திரைக் குழுவினர் திருக்காட்டுப்பள்ளி, மன்னார்குடி, தகட்டூர் வழியாக வேதாரண்யம் வந்தடைந்தனர்.

அகஸ்தியன்பள்ளி உப்பளத்தில் உப்பு அள்ளிய ராஜாஜி கைது செய்யப்பட்டார். தண்டனை விதிக்கப்பட்ட அவர், அங்குள்ள உப்புத்துறை அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்டார்.

தற்போது அந்த அறை அரசால் அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த போராட்டத் தளபதியாக வேதாரண்யம் வேதரத்தினம் பிள்ளை செயல்பட்டதால், அவரது சொத்துகளை ஆங்கிலேய அரசு பறிமுதல் செய்ததுடன், அவரையும் சிறை பிடித்தது. இந்த தியாகத்தாலேயே அவர் சர்தார் என அழைக்கப்பட்டார்.

தீண்டாமை ஒழிப்புக்கு உந்துசக்தி

சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியாவின் பல நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்று மக்களுக்கு விடுதலைப் போராட்ட உணர்வை காந்தியடிகள் ஏற்படுத்தினார். பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். தமிழகத்திற்கு 20 முறை வந்த காந்தியடிகள் மதுரைக்கு மட்டும் 5 தடவை வந்துள்ளார். அதிலும் 1921-ல் மதுரை மேலமாசி வீதியில் காந்தியடிகள் தனது ஆடைக் கோலத்தை மாற்றிய நிகழ்வே இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின், 120-க்கும் மேற்பட்ட மேடைகளில் தீண்டாமைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துள்ளார். அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்த அவர், குற்றாலம் அருவியில் குளிக்க சென்றார். ஆனால், பட்டியலினத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை அறிந்து தானும் குளிக்க மறுத்துவிட்டார். அதன்பிறகுதான் காங்கிரஸின் செயல்திட்டங்களில் தீண்டாமை ஒழிப்பும் முக்கியமாக இடம்பெற்றது.

பூலித்தேவனின் குரல்

ஆங்கிலேயருக்கு எதிராக 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நாட்டின் தென் தமிழகத்தில் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆர்க்காடு நவாப் கிழக்கிந்திய கம்பெனியுடன் சேர்ந்து மதுரை, திருநெல்வேலியில் தனது ஆட்சியை விரிவுபடுத்த முயன்றபோது, அதற்கு எதிராக மேற்குப் பாளையக்காரர்களை ஒருங்கிணைத்து கிளர்ச்சியில் ஈடுபட்டார் பூலித்தேவன்.

தனக்குரிய நெற்கட்டான் செவ்வல் பகுதியை முற்றுகையிட்ட ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு வென்றான். வீரம், வளர்ச்சி, எதிர்ப்பு என பல வழிகளில் அதிரவைத்த பூலித்தேவைனை வீழ்த்துவதற்காக அவரின் எதிரியான யூசுப்கானுக்கு ஆங்கிலேய அரசு உதவி செய்தது. அத்துடன் திருவிதாங்கூர் மன்னனின் எதிர்ப்பும் பூலித்தேவனுக்கு பிரச்சினையானது.

இருப்பினும் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தை ஆங்கிலேயரால் பிடிக்க முடியவில்லை. இதனிடையே தோல்வியால் ஏற்பட்ட பகையால் பூலித்தேவனை வீழ்த்த முடிவு செய்த யூசுப்கான், 1760-ல் நெற்கட்டான் செவ்வலை முற்றுகையிட்டார்.

இறுதியில் நெற்கட்டான் செவ்வல், வாசுதேவநல்லூர், பனையூர் போன்றவற்றை யூசுப்கான் கைப்பற்றினார். அதன்பின்னர் பூலித் தேவன் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x