

சென்னை: பெண் சாதனையாளர்களின் வாழ்க்கை பயணக் காணொளியை மாணவர்களிடையே பிரபலப்படுத்தி, அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்குழு மானியக் குழு (யுஜிசி) செயலாளர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை விமரிசையாகக் கொண்டாடும் வகையிலும், நமது மக்களின் வரலாறு, கலாசாரம் மற்றும் சாதனைகளை எடுத்துக் கூறும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது.
சுதந்திர தின கொண்டாட்டம் அனைவரையும் சென்றடையும் வண்ணம் வானொலி, தொலைக்காட்சி, மெய்நிகர் கண்காட்சி, புத்தக வெளியீடு உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வாயிலாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், பெண்களின் முன்னேற்றம், சுற்றுச்சூழல் மற்றும் நிலைத் தன்மை உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களின் அடிப்படையில் காணொளிகளின் தொகுப்பை உருவாக்கி இருக்கிறது.
"ஆசாதி கி அம்ருத் கஹானியான்" என்ற இந்த தொகுப்புகள் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வெளியானது. அதன் முதல் பட்டியலில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்றத்தை உருவாக்கிய ஊக்கமளிக்கும் 3 பெண்களின் கதைகள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக அவர்கள் அனைவரும் சாதாரண பெண்களாக இருந்து, சாதனைகள் படைத்து நாட்டுக்கும் சமூகத்துக்கும் சேவை செய்தவர்கள்.
இந்த காணொளிகள் ஆசாதி கா அம்ருத் மகோத்ஸவத்தின் கொள்கையின்படி குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு நிச்சயம் ஊக்கம் அளிக்கும். இந்த காணொளி குறித்த விவரங்களை கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இந்தி, குஜராத்தி, மராத்தி, பெங்காலி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னோட்டக் காட்சிகளுடன் கூடிய காணொளிகள் உள்ளன. இதனை கூகுளில் Azadi Ki Amrit Kahaniyan என பதிவிட்டு பார்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.