

சென்னை: தனியார் பள்ளியை மிஞ்சுகிறது சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு தொடக்கப்பள்ளி. கண்
காணிப்பு கேமரா, நூலகம் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் அசத்தலாக செயல்படுகிறது. அரசுப் பள்ளிகள் என்றாலே சுத்தமாக இருக்காது.
குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி போதுமானதாக இருக் காது. கற்றல், கற்பித்தல் பெற்றோர் எதிர்பார்க்கும் அளவு நடைபெறாது. உட்கட்டமைப்பு வசதிகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று குறைகளின் பட்டியல் நீளும்.
பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் நிலை இதுதான். அதேநேரத்தில், பல அரசுப் பள்ளிகள் தேவையான அடிப்படை வசதிகளுடன் சிறப்பாக செயல்படுவதையும் காண முடிகிறது. அந்த வரிசையில், சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு தொடக்கப்பள்ளி தனியார் பள்ளியை மிஞ்சும் அளவுக்கு அடிப்படை வசதிகளிலும், கற்றல், கற்பித்தல் பணியிலும் சிறப்பாக செயல்படுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு அரசு தொடக்கப்பள்ளி என்ற பெருமையும் இப்பள்ளிக்கு உண்டு. அதனால் பள்ளிக் கல்வித்துறையின் செல்லப்பிள்ளையாகவும், கனவுப் பள்ளியாகவும் திகழ்கிறது.
1987-ம் ஆண்டு செப்.25-ல் இப்பள்ளி 13 மாணவர்களுடன் ஓராசிரியர் பள்ளியாக தொடங்கப்பட்டது. இரண்டரை ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை 500 ஆகவும், ஆசிரியர்கள் எண்ணிக்கை 7 ஆகவும் அதிகரித்தது.
"தங்களது குழந்தைகள் ஆங்கில வழிக் கற்றல் மூலம்தான் நன்கு படித்து, வேலைக்கு செல்ல முடியும்" என்ற பெற்றோரின் சிந்தனை மாற்றத்தால், 2007-ல் மாணவர் எண்ணிக்கை 92 ஆக குறைந்தது.
பின்னர 2011-2012 கல்வியாண்டில் ஆங்கில வழிக்கல்வி கொண்டு வரப்பட்டது. கலையரங்கம், 2 டிஜிட்டல் வகுப்பறைகள், நவீன சத்துணவுக்கூடம், கண்காணிப்பு கேமரா, நூலகம் என அனைத்து வசதிகளும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உள்ளன.
அதனால், தற்போது மாணவர்கள் எண்ணிக்கை 348-ஐ எட்டியுள்ளது. பள்ளியின் சுற்றுச்சுவரில், மயிலுக்கு
போர்வை கொடுத்த வள்ளல் பேகன், கொல்லிமலையை ஆட்சி செய்த வள்ளல் வல்வில் ஓரி, முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல் பாரி போன்றோரின் வண்ண ஓவியங்கள் பளிச்சிடுகின்றன. பள்ளிகளில் காவலாளி இல்லாததால் பள்ளி அலங்கோலப்படுத்தப்படுவது குறிப்பாக குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் பாழக்கப்படுவதற்கு இப்பள்ளி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
இரவுக்காவலர் இருப்பதால் இப்பிரச்சினை அறவே இல்லை. இரண்டு சுகாதாரப் பணியாளர்கள் இருப்பதால் கழிப்பறைகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன. பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையிலும், சத்துணவுக் கூடத்திலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பது சிறப்பம்சம்.
"அனைத்து வசதிகளுடன் அசத்தும் இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப 5 கூடுதல் வகுப்பறைகளும், மேலும் 3 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டால் மாணவர்களின் எதிர்காலம் பிரகாசிக்கும்" என்கின்றனர் பெற்றோர்.
பள்ளி தலைமை ஆசிரியை ல.பெ.ராதிகா கூறியதாவது: கூடுதல் வகுப்பறைகளும், ஆசிரியர்களும் தேவை என்பதை பள்ளிக் கல்வித்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
தூத்துக்குடி ஆதவா அறக்கட்டளை எங்கள் பள்ளியின் இரவுக்காவலர், சுகாதாரப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக மாதம் ரூ.12 ஆயிரம் கொடுக்கிறது. இது இரவுக்காவலரின் சம்பளத்திற்கே சரியாகிவிடும்.
அதனால், தன்னார்வலர் ஒருவர் சுகாதாரப் பணியாளர்கள் சம்பளம் மற்றும் பிளீச்சிங் பவுடர் வாங்குவதற்காக மாதம் ரூ.7,500 தருகிறார். இது, போதாத நேரத்தில் பள்ளி ஆசிரியர்கள் உதவுகின்றனர். கோடை விடுமுறையிலும் இவர்கள் பணியில் இருப்பார்கள். திறமையான ஆசிரியர்கள், சிறந்த உட்கட்டமைப்புகள், பள்ளி மேலாண்மைக் குழு ஒத்துழைப்பு ஆகியவை தான் இப்பள்ளியின் உயர்ந்த நிலைக்கு காரணம் என்கிறார் ராதிகா.
இனிமையான கல்விச் சூழலுக்கு வழிவகுத்து, கற்றல், கற்பித்தலுக்கு முன் உதாரணமாகத் திகழும் இப்பள்ளி அரசின் கனவுப் பள்ளியாக இருப்பதில் ஆச்சரியமில்லை.சென்னை சிட்கோநகர் அரசு தொடக்கப் பள்ளியின் சீர்மிகு வகுப்புகளில் இனிமையான சூழலில் நடைபெறும் கற்றல், கற்பித்தல் காட்சிகள். படம்: டி.செல்வகுமார்