Published : 07 Jul 2022 06:06 AM
Last Updated : 07 Jul 2022 06:06 AM

சிறார், கூர்நோக்கு இல்லங்கள் மறுசீரமைப்பு: தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து விரிவான அறிக்கை தயாரிக்க உத்தரவு

சென்னை: முதல்வர் அறிவுரைப்படி சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் பல்வேறு குழந்தைகள் இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள் உள்ளிட்ட இல்லங்களில் ஆய்வு செய்து விரிவான அறிக்கை தயாரிக்க அதிகாரிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் கடந்த மாதம் 30-ம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட அரசு விழாவுக்கு செல்லும் வழியில் காரைக்கூட்ரோட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் உள்ள சமூகப் பாதுகாப்பு இயக்ககத்தின் கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அத்துடன் அங்கிருந்த மாணவர்களுடனும் கலந்துரையாடி அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தார். அப்போது அந்த இல்லத்தில் பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து அந்த இல்லத்தின் கண்காணிப்பாளர் மற்றும்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலுவலர் ஆகிய இருவருக்கும் விளக்கம் கேட்டு குற்றக் குறிப்பாணை வழங்கப்பட்டது. முதல்வர் அறிவுரையின்பேரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் மறுநாளே அந்த இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இல்லத்தில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை, வகுப்பு வாரியாக உள்ள மாணவர்களின் எண்ணிக்கை, பணியாளர்களின் வருகைப் பதிவேடு, பணியாளர்கள் விவரம், காலிப் பணியிடங்கள், இதர பணியில் உள்ள பணியாளர்களின் விவரங்கள் ஆகியவற்றை விசாரித்துஅறிந்தார்.

இல்லத்தில் உள்ள சமையலறைக்கு சென்று மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தைசாப்பிட்டுப் பார்த்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் தினசரி உணவுஅட்டவணையையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

மாணவர்களிடம் உரையாடிய அமைச்சர், காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு குறித்து அவர்களிடம் கேட்டார். வாரத்தில் 5 நாட்கள் மதிய உணவுடன் முட்டைவழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதையடுத்து இல்லம் அமைந்துள்ள வளாகத்தில் செயல்படும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் அரசினர் வரவேற்பு இல்லத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.

கட்டில், போர்வை

முதல்வர் அறிவுரையின்படி சமூகப்பாதுகாப்பு இயக்ககத்தின் கீழ் தமிழகம் முழுவதும் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்கள், பிற்காப்பு இல்லங்கள் ஆகியவற்றில் தங்கியிருக்கும் குழந்தைகளின் கல்வி, உணவு,உடை, சீருடை, தங்கும் அறை,கழிவறை, குளியலறை, விளையாட்டு மைதானம் ஆகியவற்றை இயக்குனரகஅதிகாரிகள் உடனே ஆய்வுசெய்துசமூகப்பாதுகாப்பு இயக்குனருக்குஅறிக்கை அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும், மேற்குறிப்பிட்ட இல்லங்களில்தங்கியுள்ள மாணவர்கள், சிறுவர்கள்அனைவருக்கும் முதல்வர் அறிவுரைப்படி கட்டில், போர்வை வழங்க உரியகருத்துருகளை சமர்ப்பிக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.

முழு அளவில் மறுசீரமைப்பு

அதிகாரிகள் ஆய்வு செய்து சமர்ப்பிக்கும் அறிக்கை அடிப்படையில் சமூகப் பாதுகாப்பு இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து இல்லங்களிலும் ஆசிரியர்கள் நியமனம், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனம், பிற பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் தேவைகள், தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப மாணவர்கள், சிறுவர்களின் எதிர்கால நலனுக்காக செய்ய வேண்டிய மாற்றங்கள் குறிப்பாக மாணவர்கள், சிறுவர்களுக்கு முறையான கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் மற்றும் அவர்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் கவுன்சிலிங் அளித்தல் ஆகியன குறித்து விரிவான அறிக்கை தயார் செய்து, முதல்வரின் ஆலோசனை மற்றும் அனுமதியைப் பெற்று மறுசீரமைப்புகள் முழு அளவில் செய்யப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x