Published : 06 Jul 2022 06:38 AM
Last Updated : 06 Jul 2022 06:38 AM

வருங்கால அறிவுச்சொத்து மாணவர்கள்தான் - ‘நான் முதல்வன்’ திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் புகழாரம்

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ‘நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், விழிப்புணர்வு கையேட்டை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். படம்: இரா.கார்த்திகேயன்.

திருப்பூர்: வருங்கால அறிவுச் சொத்து மாணவர்கள்தான் என்று திருப்பூரில் நடைபெற்ற விழாவில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் தொடக்கவிழா திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இவ்விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

பிளஸ் 2 முடித்தோம், கல்லூரியில் சேர்ந்தோம், பட்டம் பெற்றோம், வேலைக்கு சேர்ந்தோம், கைநிறைய சம்பளம் வாங்கினோம் என்பதோடு உங்கள் கடமை முடிந்து விடுவது இல்லை. எத்தகைய ஆற்றல் படைத்தவர்களாக நீங்கள் உயர்ந்தீர்கள், அத்தகைய ஆற்றலை வைத்து இந்த சமூகத்தை எப்படி மேம்படுத்த முயன்றீர்கள் என்பதுதான் முக்கியம்.

அதுதான் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் உண்மையான நோக்கம். அண்மையில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் திருப்பூர் மாவட்டம் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இனி வரக்கூடிய கல்வியாண்டில், மாணவர்கள் தங்களை தயார்படுத்தி, கல்வியில் முழுவீச்சில் செயல்பட வேண்டும்.

நல்ல மதிப்பெண்ணை கொண்டு, எந்த படிப்பை தேர்ந்தெடுப்பது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் வருங்கால அறிவுச்சொத்து மாணவர்கள்தான். அதை உணர்ந்து செயல்படுங்கள்.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ முன்னாள் தலைவர் விஞ்ஞானி சிவன், தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு என பல்வேறு துறைகளில் கோலோச்சிய பலரும் அரசு பள்ளியில் படித்தவர்கள்தான். நல்லகல்விப் பாதைதான் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக்கும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

மாவட்ட ஆட்சியர் சு.வினீத் பேசும்போது, “நானும் உங்களைப் போன்றுகேரளாவில் கிராமப்புற பள்ளியில் படித்தவன்தான். அன்றைக்கு மருத்துவம், பொறியியல் மட்டுமே பிரதான படிப்புகள். இன்றைக்கு அப்படியில்லை. பல்வேறு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. திருப்பூர் போன்றவேலைவாய்ப்பு நிறைந்த மாவட்டத்தில், உங்களின் எதிர்காலத்தை செம்மையாக அமைத்துக்கொள்ள இந்த ‘நான்முதல்வன்’ திட்டம் பயன்படும்”என்றார்.

விழாவில், மேயர் ந.தினேஷ்குமார், திருப்பூர் எம்எல்ஏ க.செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x