Published : 06 Jul 2022 06:03 AM
Last Updated : 06 Jul 2022 06:03 AM

25% இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை; தனியார் பள்ளிகளுக்கு விரைவில் கல்விக்கட்டண நிதி: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தகவல்

சென்னை: தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீதஇடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக்கட்டண நிலுவைத்தொகை வழங்குவற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி தெரிவித்தார்.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்புகளில் ஏழை மாணவர்கள், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக அந்தந்த பள்ளிகளில்பெறப்பட்டு அதிக விண்ணப்பங்கள் வரும்பட்சத்தில் குலுக்கல் முறையில்மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழும் சேரும் மாணவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை அந்த பள்ளிகளுக்கு அரசே செலுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரையில் ஏறத்தாழ 5 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு சராசரியாக ரூ.400 கோடி கல்விக்கட்டணமாக தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2020-2021-ம் கல்வி ஆண்டில் கரோனா சூழல், காரணமாக பள்ளிகள்முழுமையாக இயங்கவில்லை. இதைத்தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு 75 சதவீத கல்விக்கட்டணமாக அரசுரூ.314 கோடியை அரசு வழங்கியது.இந்நிலையில், கடந்த கல்வி ஆண்டுக்கான (2021-2022) கல்விக்கட்டணம் இன்னும் வழங்கப்படவில்லை என தனியார் பள்ளி நிர்வாகிகள் கவலை தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆர்.நந்தகுமார் கூறும்போது, :கடந்த கல்விஆண்டில் (2021-2022) 25 சதவீதஇடஒதுக்கீட்டின்கீழ் ஏறத்தாழ 5 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கான கல்விக்கட்டணத்தொகை தோராயமாக ரூ.400 கோடி வரவேண்டியுள்ளது. மாணவர் சேர்க்கை சரிபார்ப்பு முடிந்தபின்னர்தான் இந்த தொகை விடுவிக்கப்படும். ஆனால், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மாணவர் சேர்க்கை சரிபார்ப்பு பணிகளையே இன்னும் தொடங்கவில்லை.

இதற்கு முந்தைய கல்வி ஆண்டிலேயே முழு தொகையும் தரப்படவில்லை. 2021-2022-ம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகள் 85 சதவீத கல்விக்கட்டணத்தை வசூலிக்கலாம் என தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தில் 75 சதவீத தொகையை மட்டுமே அரசு வழங்கியது.

அந்த நிலுவைத்தொகை தொடர்பான சரிபார்ப்பு பணிகள் நடைபெறுவதால் சென்ற கல்வி ஆண்டுக்கான நிதியை விடுவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆசிரியர்களுக்கு சம்பளம், உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதி, சொத்துவரி என பள்ளி நிர்வாகத்தினருக்கு பல்வேறு செலவினங்கள் உள்ளன. எனவே, இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு கல்விக்கட்டணத்தொகையை தாமதம் இன்றி விடுவிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்ட மாநில முதன்மை அதிகாரியும், மாநில மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநருமான ஏ.கருப்பசாமியிடம் கேட்டபோது, "2020-2021-ம் கல்வி ஆண்டில் கல்விக்கட்டணத்தில் 75 சதவீதம் வழங்க அரசு முடிவுசெய்து தனியார் பள்ளிகளுக்கு ரூ.314 கோடிவழங்கப்பட்டது.

சென்ற கல்விஆண்டுக்கான (2021-2022) கல்விக்கட்டணத்தை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஒரு மாணவரின்கல்விக்கு அரசு பள்ளிகளில் செலவழிக்கப்படும் கட்டணம், தனியார் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட கல்விக்கட்டணம் இதில் எது குறைவோ அந்த தொகை கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

அந்த தொகை கணக்கீடு தொடர்பான இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணி முடிவடைந்ததும். தனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டணம் வழங்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x