1-ம் வகுப்பில் சேர 6 வயது நிறைவு கட்டாயம்: கேரள அரசு கண்டிப்பான உத்தரவு

1-ம் வகுப்பில் சேர 6 வயது நிறைவு கட்டாயம்: கேரள அரசு கண்டிப்பான உத்தரவு
Updated on
1 min read

கேரள மாநில பள்ளிகளில் 1-ம் வகுப்பில் சேர 6 வயது பூர்த்தியாகி இருப்பது கட்டாயம் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

மத்திய அரசு நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அதை கேரள மாநில கல்வித்துறை ஏற்றுக் கொண்டு தங்கள் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் அமல்படுத்தி வருகிறது. குழந்தைகளுக்கு 3 முதல் 6 வயது வரை மூளை வளரும் பருவம் என்பதால் கல்வி கற்பிப்பதை 6 வயதுக்குப் பின்னரே துவங்க வேண்டும் என்ற ஆய்வறிஞர்களின் பரிந்துரைப்படி, புதிய கல்விக் கொள்கையில் 1-ம் வகுப்பில் சேர 6 வயது பூர்த்தியாகி இருப்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 6 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை மட்டுமே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று கேரள அரசு கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது. அங்குள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் இந்த உத்தரவு ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் இந்த உத்தரவு முன்னரே அமலாகிவிட்டது.

இதற்கு முன்பு 5 வயது பூர்த்தியான குழந்தைகள் கூட 1-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டு வந்தனர். இனி அந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின்படி, 6 முதல் 14 வயது குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1 முதல் 6-ம் வகுப்பு வரை ஆரம்பக்கல்வியாகவும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஆரம்ப மேல்நிலைக்கல்வியாகவும், 9 முதல் 10-ம் வகுப்பு வரை உயர்நிலைக் கல்வியாகவும் வரையறுக்குப்பட்டுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்புவரை உள்ள கல்வியை ஒரே பிரிவாக கருதும்படியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மறைமுக அமல்:

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்படவில்லை. தமிழகத்திற்கென தனி கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கு தனிக்குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் பள்ளி, கல்லூரிகளில் மறைமுகமாக அமல்படுத்தப்பட்டு வருவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in